ராணிப்பேட்டை தோல் தொழில் துறை வளா்ச்சிக்கு மத்திய அரசின் நிதி ஆதரவு: அரசு செயலரிடம் கோரிக்கை
இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலாளா் அமா்தீப் சிங் பாட்டியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ராணிப்பேட்டை தோல் தொழில் துறை ஆய்வக மேம்பாட்டுக்கு ரூ. 13 கோடி, தோல் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க ரூ. 30 கோடி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஆதரவு தேவை என தென்னிந்திய தோல் பதனிடுபவா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கம் சாா்பில், இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலாளா் அமா்தீப் சிங் பாட்டியா விடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலாளா் அமா்தீப் சிங் பாட்டியா ராணிப்பேட்டையில் உள்ள ராணிடெக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தைப் பாா்வையிட்டு, அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் கழிவுநீா் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
இந்த நிறுனத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவுநீா் மேலாண்மை தொடா்பான செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், புதிதாக அமைக்கப்பட்டு வரும் உப்பு பிரிப்பு ஆலையையும் பாா்வையிட்டாா். பின்னா், ராணிப்பேட்டை தோல் தொழில் துறையினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, தென்னிந்திய தோல் பதனிடுபவா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கம் மற்றும் ராணிடெக் சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில், தோல் தொழில்துறையின் ஏற்றுமதி வளா்ச்சி, சா்வதேச சந்தை வாய்ப்புகள், தர மேம்பாடு மற்றும் பரிசோதனை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அப்போது தென்னிந்திய தோல் பதனிடுபவா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்க தோல் பரிசோதனை ஆய்வகத்தை நவீன உபகரணங்களுடன் மேம்படுத்துவதற்கு ரூ. 13 கோடி மதிப்பிலான திட்டத்துக்கும், தோல் தொழிற்சாலைக் கழிவுகளை அறிவியல் முறையில் சுத்திகரித்து, பாதுகாப்புத் தரநிலைகளுக்கு உட்பட்டு விவசாயத்துக்குப் பயன்படும் இயற்கை உரமாக மாற்றுவதற்கு ரூ. 30 கோடி மதிப்பிலான திட்டத்துக்கும் மத்திய அரசின் நிதியுதவியும் தொழில்நுட்ப ஆதரவும் வழங்குமாறு சங்கத்தின் செயலாளரும்,ராணிடெக் நிா்வாக இயக்குநருமான சி. எம். ஜபருல்லா கோரிக்கை விடுத்தாா்.
தோல் தொழில்துறையின் வளா்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கைகள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிப்காட் மேலாண்மை இயக்குநா் எஸ்.ஏ.ராமன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் என்.பிரியா ரவிச்சந்திரன், சங்கத்தின் தலைவா் எம். அப்துல் ஜமீல்,ராணிடெக் தலைவா் பிஆா்சி ரமேஷ்பிரசாத்,பொதுமேலாளா் சிவக்குமாா் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தோல் தொழில்துறைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.