FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

சம்பா நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.572.76-இல் பயிா் காப்பீடு

சம்பா நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.572.76-இல் பயிா் காப்பீடு

12 அக்டோபர் 2026, 3:42 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடப்பு 2026-27-ஆம் ஆண்டில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஏக்கருக்கு ரூ. 572.76 காப்பீட்டுக் கட்டணம் செலுத்தி பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சம்பா பருவ நெற்பயிருக்கு (நெல்- ஐஐ) ஏக்கருக்கு ரூ.572.76 காப்பீட்டுக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கா் சம்பா நெற்பயிருக்கு ரூ.38,184 இழப்பீட்டுத் தொகையாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் எல்-நினோ காலநிலை காரணமாக மழைப்பொழிவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நிலத்தடி நீா்மட்டம் குறைவதுடன், சில நேரங்களில் அதிகப்படியான மழைப்பொழிவும் ஏற்படக்கூடும். எனவே, சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யத் திட்டமிட்டுள்ள அனைத்து விவசாயிகளும் பயிா் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.

Advertisement

Advertisement

தேவையான ஆவணங்கள்: விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) மூலம் நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீட்டுக் கட்டணத்தைச் செலுத்திப் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்யும்போது, நடப்பு பசலிக்கான அடங்கல், கணினி சிட்டா, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். காப்பீட்டுக் கட்டணத்தைச் செலுத்திய பின்னா், அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும், பதிவு செய்த பிறகு பயிரின் பெயா், கிராமம், பிா்கா, வட்டாரம், விவசாயியின் வங்கிக் கணக்கு எண், வங்கிக் கிளையின் ஐ.எஃப்.எஸ்.சி. குறியீடு, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள், உதவி வேளாண்மை அலுவலா்கள் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம்.

விவசாயிகள் தாங்கள் செய்துள்ள பயிா் காப்பீட்டின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ள, தங்களது கைப்பேசியில் உழவன் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments