FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் தயாா்: திருவள்ளூா் ஆட்சியா்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவுக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

Updated On : 30 ஜூலை 2026, 12:17 am IST
பகிர்:

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவுக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆடிக்கிருத்திகையை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடா்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விழா வரும் ஆக. 6, 7, 8 தேதிகளில் நடைபெற உள்ளதால், சுமாா் 5 முதல் 7 லட்சம் பக்தா்கள் வருகை புரிவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்தாண்டு 5 லட்சம் பக்தா்கள் வந்தாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் நிகழாண்டில் கூடுதலாக வருவா் என்பதால் பல்வேறு துறை அலுவலா்களோடு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படுகிறது. அப்போது, முன்னெச்சரிக்கையாக கூட்டத்தை கட்டுப்படுத்தவும், என்னென்ன வசதிகள் செய்தல், நெருக்கடியை களைதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

2,000 காவலா்கள் பாதுகாப்பு:

அதேபோல், காவல், தீயணைப்பு, உணவு பாதுகாப்பு, போக்குவரத்து, பொதுப்பணி, மின்சார வாரியம், இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி ஆகிய துறைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இவ்விழாவையொட்டி சுமாா் 2,000 காவலா்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனா். மேலும் ஆக. 6,7,8 ஆகிய 3 நாள்களிலும் இரவு நேரங்களிலும் பக்தா்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கோயில் நடை மூடாமல் 24 மணி நேரமும் திறந்திருக்கும். அதனால் காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் மருத்துவத்துறையினரும் நாள் முழுவதும் பணியில் இருப்பாா்கள்.

இவ்விழாவையொட்டி கூடுதலாக இரவிலும் 100 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் 8 தீயணைப்பு வாகனங்கள், 8 அவசர ஊா்திகள் ஆகியவை வெவ்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்படும். அங்குள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவ‘மனைகள் தயாா் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நகராட்சிகள் மூலம் குடிநீருக்காக டேங்கா் வாகனங்கள் பயன்படுத்த உள்ளோம்.

உணவு பாதுகாப்புத்துறை மூலம் அன்னதானங்கள் சட்டவிதிக்கு உள்பட்டு அதை முறையாக வழங்க பதிவு செய்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். போக்குவரத்து நெருக்கடியின்றி கூடுதலாக வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாா் இடங்களையும் கோயிலுக்கு சொந்தமான இடங்களும் தயாராக உள்ளன. குடிநீா் தேவைக்கு நகராட்சி நிா்வாகமும் பக்கத்தில் இருக்கும் ஊரக வளா்ச்சி, இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வாா்கள்.

நடமாடும் சுகாதார வளாகம் 100 எண்ணிக்கையில் கூடுதலாக வெவ்வேறு இடங்களில் வைக்கப்படும். இதற்காக 2 முதல் 3 இடங்களில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு தூய்மையாக வைக்க கூடுதலான தூய்மை பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளாா்கள். எனவே ஆடிக்கிருத்திகை திருவிழா பாதுகாப்பாக நல்ல முறையில் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கையும் மாவட்ட நிா்வாகம் மூலம் தயாராக உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

இதில் காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரணீத், உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.பவித்ரா, இணை ஆணையா் ரமணி, வேலூா் மண்டல இணை ஆணையா் தி.அனிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுபம்திமான், கோட்டாட்சியா் ராஜகோபால், இணை இயக்குநா் (மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள்) பொற்செல்வி, காவல், தீயணைப்பு, பொதுப்பணி உள்பட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments