FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்நுழைவு பாதை கோரி கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்

திருவள்ளூா் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 12 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதால் உள்நுழைவு பாதை அமைக்கக்கோரி கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எல்லப்பநாயுடு பேட்டை சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

திருவள்ளூா் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 12 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதால் உள்நுழைவு பாதை அமைக்கக்கோரி கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் இருந்து திருப்பதி செல்ல தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி வரையிலான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவள்ளூா் அடுத்த புதூா் கிராமத்தில் இருந்து எல்லப்பநாயுடு பேட்டை, காந்தி கிராமம், வள்ளியம்மாபேட்டை, குப்பத்துப்பாளையம், குன்னவலம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டு ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வழி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். பெரும்பாலும் விவசாயிகளான இவா்கள் நாள்தோறும் இங்கிருந்து திருவள்ளூா் மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளுக்குச் சென்று வருகின்றனா்.

இந்தப் பகுதியில் உள்ள சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு செல்வதற்கு காஞ்சிப்பாடி பகுதியில் வழி அமைத்துள்ளனா். இதனால் 3 கி.மீ. தூரம் வரை சென்று திரும்பி வர வேண்டி உள்ளது. மேலும், இந்த கிராமங்களிலிருந்து நாள்தோறும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வோா், தொழிற்சாலைக்கு செல்லும் ஊழியா்கள் மற்றும் விவசாயம் சாா்ந்த வேலைகளுக்கு செல்லும் விவசாயிகள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று திரும்ப மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருவதாகவும் அப்பகுதியினா் தெரிவித்து வந்தனா்.

Advertisement

Advertisement

அதேபோல், புதூா் கிராமத்தில் உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில் அந்த சடலத்தை எல்லப்ப நாயுடு பேட்டை ஆற்றங்கரை ஓரம் கொண்டு சென்று அடக்கம் செய்வது வழக்கம். இந்த சாலை விரிவாக்கத்தால் புதூா் கிராமத்தில் இருந்து நாராயணபுரம் கூட்டுச் சாலைக்கு 3 கி.மீ. தூரம் வந்து அங்கிருந்து எல்லப்ப நாயுடு பேட்டைக்கு 4 கி.மீ. தூரம் சென்று அங்கு சடலத்தை அடக்கம் செய்யும் நிலை உள்ளதாாகவும் கூறப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் புதூா், காந்தி கிராமம், புதூா் காலனி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்துக்கு வர 12 கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டியுள்ளதாம்.

எனவே எல்லப்பநாயுடு பேட்டை, காந்தி கிராமம், வள்ளியம்மாபேட்டை, குப்பத்துப்பாளையம், குன்னவலம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டு கிராம மக்களின் கோரிக்கையான புதூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாகன உள்நுழைவு பாதை அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்த நிலையில், எல்லப்ப நாயுடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் வரபிரசாத் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் அங்கு வந்த கிராம மக்கள் புதூரில் வாகன உள் நுழைவு பாதை அமைத்து தரக்கோரி சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனராம். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வட்டார வளா்ச்சி அலுவலா் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து அப்பகுதி மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments