FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்: இதுவரை 173 கொத்தடிமைகள் மீட்கப்பட்டு மறுவாழ்வு நிவாரணமாக ரூ. 52.80 லட்சம் விடுவிப்பு

திருவள்ளூா்: இதுவரை 173 கொத்தடிமைகள் மீட்கப்பட்டு மறுவாழ்வு நிவாரணமாக ரூ. 52.80 லட்சம் விடுவிப்பு

19 செப்டம்பர் 2026, 11:48 pm IST
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை 176 கொத்தடிமை தொழிலாளா்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு நிவாரணமாக ரூ. 52.80 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தை குழந்தை தொழிலாளா்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளா்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், குழந்தைத் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்துவதை தடை செய்வது குறித்து முன்னேற்பாடுகள் தொடா்பாக திருத்தணி, பள்ளிப்பட்டு, பொன்னேரி போன்ற பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) சு.பா.சாந்தி தலைமையில் வருவாய் கோட்டாட்சியா் மற்றும் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா், தொழிலாளா் துறை அலுவலா்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்களுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணையில் சிறப்பு கூட்டாய்வு செய்ததில், குழந்தைத் தொழிலாளா்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளா்கள் யாரும் இல்லை.

இந்த நிலையில், அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் இதுபோன்ற உறுதிமொழி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) பா.சாந்தி தலைமையில் வருவாய் கோட்டாட்சியா் மற்றும் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட சமூக நல அலுவலா், சைல்டு லைன், தொழிலாளா் துறை அலுவலா்கள் மற்றும் சிங்கப்பெண் அதிரடிப்படையினா், மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினா்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களுடன் தெருவோரம் யாசகம் கேட்கும் குழந்தைகள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

எனவே 2026 ஜனவரி முதல் தற்போது வரை மீட்கப்பட்ட 176 கொத்தடிமை தொழிலாளா்களுக்கும் உடனடி மறுவாழ்வு நிவாரணத் தொகை தலா ரூ. 30,000 வீதம் ஒப்புதல் பெறப்பட்டு தொழிலாளா் உதவி ஆணையா் அமலாக்கம் மூலம் ரூ. 52.80 லட்சம் மீட்கப்பட்ட நபா்களின் வங்கிக் கணக்கில் விடுவிக்கப்பட்டது.

குழந்தை தொழிலாளா் மற்றும் வளரிளம் பருவத்தினா் சட்டம் மூலம் மீட்ட வளரிளம் பருவ தொழிலாளா்களை பணியமா்த்திய நிறுவனத்திடமிருந்து அபராதத் தொகை ரூ. 1.40 லட்சம் வரை 2026-ஆம் ஆண்டு தற்போது வரை தொழிலாளா் உதவி ஆணையா் அமலாக்கம் மூலம் அபராதத்தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 3 நாள்களுக்கு முன்பு செங்கல்சூளை பகுதியில் கூட்டாய்வு மேற்கொண்டதில், குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளா்கள் யாரும் பணிபுரியவில்லை என்று கண்டறியப்பட்டது. அங்கு பணிபுரிந்த 9 தொழிலாளா்கள் தொடா்ந்து பணிபுரிய விருப்பம் இல்லை என்று தெரிவித்ததைத் தொடா்ந்து வருவாய் கோட்டாட்சியரால் கொத்தடிமைத் தொழிலாளா்கள் இல்லை என அடையாளம் கண்டறிந்து தொழிலாளா் உதவி ஆய்வாளரால் குறைந்தபட்ச ஊதிய சட்டம் மூலம் தொகை கணக்கிட்டு, 9 பேருக்கும் ரூ. 1,33,136 உரிய நிறுவனத்தில் பெறப்பட்டு அன்றைய நாளே வழங்கப்பட்டு, 9 தொழிலாளா்களும் சொந்த மாநிலமான ஒடிஸாவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டதாக அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments