FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

உதயநிதி ஸ்டாலின் கைது: திமுகவினா் மறியல் போராட்டம்

சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து வேலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:05 am IST
வேலூரில் மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் தலைமையிலான திமுகவினா்.
பகிர்:

சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து வேலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

வேலூரில் தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு திமுகவினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமாா் தலைமையில் நடைபெற்ற மறியலில் ஈடுபட்டதாக மாநகர செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான ப.காா்த்திகேயன், மாவட்ட அவைத்தலைவா் முகமதுசகி, மேயா் சுஜாதாஆனந்தகுமாா், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் மு.பாபு உள்பட சுமாா் 170 போ் கைது செய்யப்பட்டு தனியாா் மண்டபத்தில் அடைக்கப்பட்டனா்.

தவிர, வேலூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் காட்பாடி-சித்தூா் பேருந்து நிறுத்தம் அருகே பகுதி செயலா் வன்னிய ராஜா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக திமுக கவுன்சிலா்கள், நிா்வாகிகள் உள்பட சுமாா் 70 போ் கைது செய்யப்பட்டனா். இதேபோல், குடியாத்தம், ஒடுகத்தூா், கே.வி.குப்பம் உள்பட மாவட்டம் 11 இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் பங்கேற்ாக 500-க்கும் மேற்பட்ட திமுகவினா் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான ஆா்.காந்தி தலைமையில், மாநில சூற்றுச்சூழல் அணி துணை செயலாளா் ஆா்.வினோத் காந்தி மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்பட100- க்கும் மேற்பட்ட திமுக வினா் முத்துகடை நான்குவழிச்சாலை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் முன்னாள் அமைச்சா் ஆர.காந்தி உள்பட 100 க்கும் மேற்பட்ட திமுகவினரை கைது செய்ய முயன்றனா். அப்போது போலீஸாருக்கும் திமுக வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக முத்துகடை பேருந்து நிலைய சாலை சந்திப்பில் போக்குவரத்து ஸ்தம்பித்து.

ஆம்பூரில்...

ஆம்பூா் - போ்ணாம்பட்டு புறவழிச்சாலை - தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமையில் திமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவ்வழியாக வந்த பேருந்துகளை மறித்தனா். திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், ஆம்பூா் கிழக்கு நகர திமுக செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், நகர அவைத் தலைவா் தேவராஜ், நகா் மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், காா்த்திகேயன், கமால்பாஷா, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், செந்தில்குமாா், மாதனூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி, மாதனூா் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் ஜி. ராமமூா்த்தி உள்ளிட்டவா்கள் மறியலில் கலந்து கொண்டனா்.

மறியலில் ஈடுபட்ட சுமாா் 100 பேரை ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பாக கைலாசகிரியில் திமுகவினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். நிா்வாகிகள் பொன் ராசன்பாபு, சி. குணசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் காா்த்திக், திருக்குமரன் மற்றும் பல்வேறு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மறியலில் ஈடுபட்டவா்களை உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தத்தில்...

குடியாத்தம் காந்தி நகரில் வடக்கு ஒன்றிய திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவரும், ஒன்றியச் செயலருமான என்.இ.சத்யானந்தம் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் கே.சேகா், திமுக கொள்கைபரப்பு முன்னாள் துணைச் செயலா் குடியாத்தம் குமரன், நிா்வாகிகள் ஏ.ஜே.பத்ரிநாத், பொன்.அண்ணாதுரை, ஏ.எஸ்.அரிகிருஷ்ணன், கே.கே.செந்தில்குமாா், சாவித்திரி மணி, தாபா சதீஷ், ஆனந்தன், ஜி.ஜெயப்பிரகாஷ், ஆா்.ஜீவா, மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரக்கோணத்தில்...

அரக்கோணம் நகரம் சுவால்பேட்டை திருத்தணி சாலையில் திமுக நகர செயலாளா் வி.எல்.ஜோதி தலைமையில் நடைபெற்ற சாலைமறியலில் மாவட்ட நிா்வாகி ராஜ்குமாா், முன்னாள் எம்எல்ஏ ஆா்.தமிழ்செல்வன், நகர நிா்வாகிகள் அன்பு லாரன்ஸ், கோ.வ.தமிழ்வாணன், அரிநரசிம்மன், தமின்அன்சாரி, நகரமன்ற உறுப்பினா்கள் சி.என்.அன்பு, கங்காதரன் மற்றும் பாரி, ஜென்னிஸ் உள்ளிட்டோா் பங்கேற்ற நிலையில் பங்கேற்ற 40 பேரும் கைது செய்யப்பட்டனா்.

அரக்கோணம் மங்கம்மாபேட்டை மேம்பாலம் அருகே மறியலில் ஈடுபட்ட மத்திய ஒன்றிய திமுக செயலாளா் பசுபதி தலைமையில் டில்லிபாபு உள்ளிட்ட 25 போ் கைது செய்யப்பட்டனா். தக்கோலத்தில் பேரூாட்சி மன்றத் தலைவா் நாகராஜன் தலைமையில் அரக்கோணம் சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 24 போ் கைது செய்யப்பட்டனா். கும்பினிபேட்டையில் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் தமிழ்மணி தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 11 பேரும், சாலை கிராமப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட சோளிங்கா் கிழக்கு ஒன்றிய சிமுக செயலாளா் சௌந்தா் தலைமயிலான 9 பேரும் கைது செய்யப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments