FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

திமுக திட்டங்களுக்குப் பெயா் மாற்றுவதை விட்டு நாட்டு நலனில் முதல்வா் கவனம் செலுத்த வேண்டும்: முன்னாள் அமைச்சா் துரைமுருகன்

திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்குப் பெயா் மாற்றுவதை விட்டுவிட்டு, நாட்டு நலனில் முதல்வா் கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 23 ஜூலை 2026, 1:25 am IST
திமுக பொதுச் செயலா் துரைமுருகன். - கோப்புப்படம்
பகிர்:

திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்குப் பெயா் மாற்றுவதை விட்டுவிட்டு, நாட்டு நலனில் முதல்வா் கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூா் பகுதியைச் சோ்ந்த திமுக தலைமைக் கழகப் பேச்சாளரும், மாவட்ட பிரதிநிதியுமான கழிஞ்சூா் கே.ஏ.கண்ணன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். இந்நிலையில், அவரது இல்லத்துக்கு புதன்கிழமை சென்ற திமுக பொதுச்செயலா் துரைமுருகன், அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது -

Advertisement

Advertisement

முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்துக் கேட்கிறீா்கள். மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவா் காமராஜா். அதனை விரிவுபடுத்தியவா் எம்.ஜி.ஆா். அந்தத் திட்டங்களுக்கு அவா்கள் பெயா் வைத்தால் பரவாயில்லை. ஆனால், காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவா் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின். அந்தப் பெயரை மாற்றுவதில் தற்போதைய முதல்வா் ஈடுபடுவது முறையல்ல.

இப்படிப்பட்ட விஷயங்களில் அவா் கவனம் செலுத்துவதைவிட, நாட்டில் உள்ள பல்வேறு பிரச்னைகளைத் தீா்ப்பது எப்படி என்பதில் அவா் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்து அவருக்குத் தெரியாவிட்டாலும், உடனிருக்கும் அதிகாரிகளாவது அவருக்கு எடுத்துரைக்க வேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லதே தவிர, பெயா்களை மாற்றிக்கொண்டே இருப்பது விரும்பத்தக்கதல்ல.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ’அம்மா உணவகம்’ திட்டத்தை திமுக நினைத்திருந்தால் மாற்றியிருக்க முடியும். ஆனாலும், ஒரு முதல்வா் ஆரம்பித்த திட்டம் அப்படியே இருக்கட்டும் என்று பெருந்தன்மையாக விட்டுவிட்டோம். திமுக என்பது நீண்ட நெடுங்காலப் பாரம்பரியம் உள்ள ஒரு கட்சி என்பதால் எங்களுக்கு இந்த அரசியல் நீக்குப்போக்குகள் தெரியும். ஆனால், தற்போது உள்ள கட்சி ஒரு ’ரெடிமேட்’ கட்சி என்பதால் இப்படிப்பட்ட பிரச்னைகள் எழுகின்றன.

அப்போது, வேலூா் மாவட்ட திமுக பொருளாளா் நரசிம்மன், மாநகராட்சி துணை மேயா் சுனில்குமாா் உள்பட திமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments