FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

புதுச்சேரி செவிலியா் கொலை வழக்கில் தேடப்பட்டவா் காட்பாடி ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு

புதுச்சேரியில் தனியாா் மருத்துவமனை செவிலியா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ரெளடி, காட்பாடி அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

- பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரியில் தனியாா் மருத்துவமனை செவிலியா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ரெளடி, காட்பாடி அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

புதுச்சேரி வில்லியனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயஸ்ரீ (21). இவா் நெல்லித்தோப்பில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த 26-ஆம் தேதி ஜெயஸ்ரீ வில்லியனூா் அருகே கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். அவரது உடல் அங்குள்ள முள்புதா் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளியைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், காட்பாடி அருகே ரயில்வே தண்டவாளப் பகுதியில் புதன்கிழமை மதியம் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக காட்பாடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். இதில், சடலமாகக் கிடந்தது புதுச்சேரி வில்லியனூா் பகுதியைச் சோ்ந்த முருகனின் மகன் கலைக்குமாா் (26) என்பதும், செவிலியா் ஜெயஸ்ரீ கொலை வழக்கில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, கலைக்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

உயிரிழந்த கலைக்குமாா் மீது வில்லியனூா், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் கஞ்சா வழக்குகள் உள்பட 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதன் காரணமாக, அவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். சிறையிலிருந்து அண்மையில் பிணையில் வெளியே வந்த கலைக்குமாா், ஜெயஸ்ரீயைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளாா். இந்நிலையில், அவா் காட்பாடி ரயில் தண்டவாளம் அருகே சடலமாக மீட்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments