சிறுத்தை கொல்லப்பட்ட விவகாரம்: வனத் துறை அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் போராட்டம்
சிறுத்தை கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆனைமலையில் உள்ள பொள்ளாச்சி வனச் சரக அலுவலகம் முன்பு
சிறுத்தை கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆனைமலையில் உள்ள பொள்ளாச்சி வனச் சரக அலுவலகம் முன்பு 150க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி வனச்சரகம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சில நாள்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று கொல்லப்பட்டு, நகம், பற்கள் திருடப்பட்டிருந்தன. சிறுத்தையை சுருக்கு வைத்து பிடித்த ஆதாரத்தை மறைப்பதற்காக வேட்டையாடியவர்கள் அதன் தலையை அகற்றியிருந்தனர்.
சிறுத்தையை கொன்றவர்களைக் கண்டறிய வனத் துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அங்கலக்குறிச்சி ஜெ.ஜெ.நகர், பந்தக்கல்அம்மன்பதி, நரிக்கல்பதி பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், தங்களை வனத் துறையினர் துன்புறுத்துவதாகக் கூறி ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால், இது தங்கள் பகுதிக்கு உள்பட்டது அல்ல என்று கூறி புகாரை வாங்க போலீஸார் மறுத்ததாகத் தெரிகிறது. இ
தனால், ஆனைமலை காவல் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆனைமலை தாத்தூர் பிரிவு அருகே உள்ள வனச்சரக அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு வனத் துறையினர் யாரும் இல்லாததால், வனத் துறை அலுவலகம் முன்பு அமர்ந்து இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வால்பாறை டிஎஸ்பி சுப்ரமணியம், காவல் ஆய்வாளர் அம்மாத்துரை ஆகியோர் மலைவாழ் மக்களிடம் பேச்சு நடத்தியும் கலைந்து செல்லவில்லை.
ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர் கணேசன் நேரில் வந்து மலைவாழ் மக்களிடம் பேச்சு நடத்தி சம்பந்தபட்ட வனத் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தும் சமாதானம் ஆகவில்லை.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:
வனப் பகுதியில் சிறுத்தை கொல்லப்பட்ட பிரச்னையில், மலைவாழ் இனத்தைச் சேர்ந்த 10 பேரை வனத் துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பந்தக்கல் அம்மன்பதியை சேர்ந்த முருகன் என்பவருக்கு ஊசி போட்டுள்ளனர். இதில் மயக்கமடைந்த முருகன் நீண்டநேரம் கழித்தே சுயநினைவுக்கு திரும்பியுள்ளார்.
எதற்காக ஊசி போட்டார்கள், என்ன மருந்து செலுத்தினார்கள் என்பது தெரியவில்லை. வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த மாதிரி கொடுத்துள்ளோம்.
சிறுத்தையை வேட்டையாடியர்களை கண்டுபிடிக்க வனத் துறையினர் விசாரணை நடத்தட்டும். ஆனால், ஊசி போடுவது போன்ற செயலை ஏற்றுக் கொள்ளமுடியாது.
சிறுத்தையை உண்மையாகக் கொன்றவர்களை தப்பிக்க வைக்கவே வனத் துறையினர் எங்கள் மீது பழி சுமத்துகின்றனர். விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களிடம் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்தும் வாங்கியுள்ளனர் என்றனர்.
மலைவாழ் மக்களுடன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கோவை மாவட்டத் தலைவர் பரமசிவம், சிபிஎம் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் துரைசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.