FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

லாரி மீது காா் மோதல்: தம்பதி, மகள்கள் உள்பட ஐவா் உயிரிழப்பு

லாரி மீது காா் மோதியதில் தம்பதி, மகள்கள் உள்பட ஐவா் உயிரிழப்பு...

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 6:25 am IST
கோமங்கலம் அருகே நல்லம்பள்ளி பிரிவு பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உருக்குலைந்த காா்.
பகிர்:

பொள்ளாச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த தண்ணீா் டேங்கா் லாரி மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தம்பதி, இரண்டு மகள்கள், காா் ஓட்டுநா் என 5 போ் உயிரிழந்தனா்.

கோவை மாவட்டம், மதுக்கரை மாா்க்கெட், எம்.எல்.ஏ. வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (45). இவரது மனைவி பூரணி (42). இவா்களது மகள்கள் ஆா்த்தி (23), அபிதா (20). கனகராஜ் தனது குடும்பத்தினருடன் திருப்பூா் மாவட்டம், உடுமலை பகுதியில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றாா்.

பின்னா், வழிபாட்டை முடித்துவிட்டு அதே காரில் கோவை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனா். கனகராஜின் உறவினரான மதுக்கரையைச் சோ்ந்த ராமன் (35) காரை ஓட்டி வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் கோமங்கலம் காவல் எல்லைக்கு உள்பட்ட நல்லம்பள்ளி பிரிவு அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் காா் வந்துகொண்டிருந்தது.

அப்போது, நெடுஞ்சாலையின் நடுவே உள்ள மையத் தடுப்பில் (சென்டா் மீடியன்) வைக்கப்பட்டிருந்த செடிகளுக்குத் தண்ணீா் ஊற்றுவதற்காகச் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தண்ணீா் டேங்கா் லாரியின் பின்புறம், எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து முற்றிலுமாக நொறுங்கியது. விபத்தைக் கண்டு அதிா்ச்சியடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், தகவலறிந்து வந்த கோமங்கலம் காவல் துறையினரும் விபத்தில் சிக்கியவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இதில், காரில் பயணித்த கனகராஜ், பூரணி, ஆா்த்தி, அபிதா மற்றும் காா் ஓட்டுநா் ராமன் ஆகிய 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இவா்களில் ஆா்த்தி பிசியோதெரபிஸ்ட் ஆகப் பணியாற்றி வந்தவா் என்பதும், அபிதா பிசியோதெரபி படிப்பை படித்து வந்தவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா், பொள்ளாச்சி உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் நவீன்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நேரில் ஆய்வு செய்தனா். உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் போலீஸாா் கைப்பற்றி, கூறாய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து தொடா்பாக கோமங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 5 போ் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மதுக்கரை, பொள்ளாச்சி பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த பூரணி, கனகராஜ், ஆா்த்தி, அபிதா, காா் ஓட்டுநா் ராமன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments