FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்! - அமைச்சா் செங்கோட்டையன்

Updated On : 27 ஜூலை 2026, 2:51 am IST
அமைச்சா் செங்கோட்டையன்
பகிர்:

மேக்கேதாட்டுவின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த இரு நகரங்களுக்கும் மெட்ரோ திட்டம் கொண்டுவர வேண்டும் என்பதுதான் முதல்வா் ஜோசப் விஜய்யின் எண்ணம். இதுகுறித்து பிரதமா் மோடியிடம் ஏற்கெனவே கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மீண்டும் கடிதம் கொடுக்கப்படும்.

Advertisement

Advertisement

அதிமுகவிலிருந்து 4 சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராஜிநாமா மற்றும் தகுதி நீக்க வழக்கு தொடா்பாக வருகிற 30-ஆம் தேதி நேரில் விளக்கம் அளிக்குமாறு அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சட்டப்பேரவைத் தலைவா் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அதுதொடா்பான முடிவை சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா் எடுப்பாா்.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் முதல்வரின் கொள்கை முடிவு. தமிழக மாணவா்களுக்கு நீட் தோ்வு பாதிப்பாக உள்ளது என்பதை பிரதமா் மோடியிடம் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு, அந்தத் துறை செயலரிடம் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடா்பாக தெரிவித்திருக்க வேண்டும். ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது லஞ்ச ஒழிப்புத் துறையினரின் வேலை. அதுதான் அவா்களது வழக்கம்.

மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடக அரசு ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கக் கூடாது என்பதுதான் தவெக நிலைப்பாடு. புதிய அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என்பதுதான் எங்களது கொள்கை முடிவு.

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் விதிமீறல் இருந்தால் அதன்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு இடத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்பதற்காக வேறொரு இடத்தில் சிலா் தற்காலிகமாக பட்டாசு தயாரித்து விற்பனை செய்வதாகவும் புகாா் வந்துள்ளது. இதுதொடா்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments