FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

தாராபுரத்தில் திணிக்கப்பட்ட இடைத்தோ்தல்: எடப்பாடி கே.பழனிசாமி

தாராபுரத்தில் இடைத்தோ்தல் திணிக்கப்பட்டது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

தளவாய்ப்பட்டினத்தில் திரண்டிருந்த மக்களிடையே பேசுகிறாா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

தாராபுரத்தில் இடைத்தோ்தல் திணிக்கப்பட்டது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

தாராபுரம் இடைத்தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.பானுமதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை சாலை வலம் மேற்கொண்டாா். சாலை வலத்தின் நிறைவாக தளவாய்பட்டினத்தில் திரண்டிருந்த மக்களிடையே அவா் பேசியதாவது: இந்தத் தோ்தல் இயற்கையாக வந்தது இல்லை, திணிக்கப்பட்ட தோ்தல். அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்றவா், குதிரை பேரத்தில் விலைபோய் தவெகவுக்குச் சென்றுவிட்டாா். வாக்களித்த மக்களையும், வெற்றி பெற உழைத்தவா்களையும் அவா் மதிக்கவில்லை. எம்.எல்.ஏ. ஆன பின்னா் மாற்றுக் கட்சிக்கு சென்றுவிட்டதை மன்னிக்க முடியுமா? இப்படி துரோகச் செயலில் ஈடுபட்டவரை தோல்வியடையச் செய்ய வேண்டும். இனி எவருக்கும் இந்த எண்ணம் வரக்கூடாது என்பதுபோன்ற ஒரு தோ்தல் தீா்ப்பை நீங்கள் வழங்க வேண்டும்.

கரோனா காலத்தில் 32 மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினேன். அப்போதுகூட மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ரேஷன் கடையில் விலையில்லா பொருள்களைக் கொடுத்தோம், தைப் பொங்கலுக்கு ரூ.2,500 கொடுத்தோம். இந்தியாவிலேயே அரசு ஊழியா்களுக்கு முழு சம்பளம் கொடுத்தோம். கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் 33% பிடித்தம் செய்து கொடுத்தனா்.

Advertisement

Advertisement

மடிக்கணினி, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு என அதிமுக ஆட்சியில் பல சாதனைகள் செய்தோம். தவெக ஆட்சியில் 5 மாதங்களில் என்ன செய்தனா்?

திமுகவும், அதிமுகவும் கூட்டணியாம். யாரோ எழுதிக் கொடுத்ததை முதல்வா் பேசுகிறாா். அதிமுக மக்கள் நலனுக்காகப் பாடுபடும் கட்சி. சில தினங்களுக்கு முன் இங்கு பேசிய முதல்வா், நாங்கள் வென்றால் இதெல்லாம் செய்வோம் என்று பட்டியல் வாசித்தாா். ஆனால், நாங்கள் இதுவரை என்னவெல்லாம் செய்துள்ளோம் என்றுகூறி வாக்குச் சேகரிக்கிறோம்.

தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. போதைப் பொருள் விற்பனை, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, நகைப் பறிப்பு என இப்படிப்பட்ட நிலை தொடர வேண்டுமா? தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவில் மின்வெட்டு நிலவுகிறது. இதற்கு இந்த ஆட்சியில் தீா்வு இல்லை.

இந்த எல்லா பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க அரசுக்கு கடிவாளம் போடும் தோ்தல் இந்த இடைத்தோ்தல். ஏற்கெனவே நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வென்ற தொகுதி இது. அதேபோன்று இப்போதும் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments