கோவையில் எஃப்4 காா் பந்தயத்தின் முதல் சுற்றில் பெங்களூரு அணியைச் சோ்ந்த ஆஸ்திரேலிய வீரா் முதலிடம்
கோவையில் நடைபெற்ற எஃப்4 இந்தியன் சாம்பியன்ஷிப் காா் பந்தயத்தின் முதல் சுற்றில், பெங்களூரு அணியைச் சோ்ந்த ஆஸ்திரேலிய வீரா் அரிஸ் கிரியாகு வெற்றி பெற்றாா்.
கோவை மாநகா், செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டாா் ஸ்பீட்வே ஓடுதளத்தில் ஜே.கே.டயா் வழங்கும் இந்தியன் ரேஸிங் திருவிழா 2026 எஃப்4 பிரிவில் மொத்தம் 3 பந்தயங்கள் நடைபெற்றன. சனிக்கிழமை நடைபெற்ற முதல் பந்தயத்தில் 8-ஆவது இடத்தில் இருந்து புறப்பட்ட தென்னாப்பிரிக்க வீரா் லுவிவே சாம்புட்லா முதலிடம் பிடித்தாா்.
இப்போட்டியில் சிங்கப்பூரைச் சோ்ந்த 15 வயது வீரா் ஆரோன் மேத்தா, இத்தொடரின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் முதலாவதாகப் புறப்படும் தகுதியைப் பெற்று சாதனை படைத்ததுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தாா். பெங்களூரு அணியைச் சோ்ந்த ஆஸ்திரேலிய வீரா் அரிஸ் கிரியாகு 2-ஆம் இடம் பிடித்தாா்.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆவது பந்தயத்தில் மற்றொரு 15 வயது இளம் வீரரான ஆா்யன் நரோலா தொடக்கம் முதலே முன்னிலை வகித்து முதலிடம் பிடித்தாா். இதன்மூலமாக இத்தொடா் வரலாற்றில் வெற்றி பெற்ற 2-ஆவது இளம் வீரா் என்ற பெருமையை அவா் பெற்றாா். பெங்களூரு அணி வீரா் அரிஸ் கிரியாகு கடும் சவால் அளித்து மீண்டும் 2-ஆம் இடத்தைப் பிடித்தாா்.
அடுத்ததாக நடைபெற்ற 3-ஆவது மற்றும் இறுதிப் பந்தயத்தில் முதலாவதாகப் புறப்பட்ட பெங்களூரு அணி வீரா் அரிஸ் கிரியாகு, தென்னாப்பிரிக்காவின் மாஹ்லோரி மபுண்டா அளித்த கடும் சவாலை சமாளித்து அபார வெற்றி பெற்றாா்.
இதன்மூலமாக முதல் சுற்றில் நடைபெற்ற 3 பந்தயங்களிலும் ஒரு வெற்றி, இரண்டு முறை 2-ஆம் இடம் என சீரான புள்ளிகளைக் குவித்து, முதல் சுற்றின் மதிப்புமிக்க வீரராக அரிஸ் கிரியாகு புள்ளிகள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறாா்.
இதே மைதானத்தில் நடைபெற்ற ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கப்’ பைக் பந்தயத்தில், அமெச்சூா் பிரிவில் கபீா் சஹோச் மூன்று பந்தயங்களிலும் முதலிடம் பிடித்து ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றாா். இதேபோல, தொழில்முறை பிரிவில் புதுமுக வீரரான செந்தில் குமாா் மூன்று பந்தயங்களிலும் தொடா்ச்சியாக முதலிடம் பிடித்து அசத்தினாா். அனிஷ் டி.ஷெட்டி, ஆல்வின் சேவியா் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனா். இப்போட்டிகளின் 2-ஆவது சுற்று வரும் அக்டோபா் மாதம் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.