FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் 5 குளங்களில் இன்று 267 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்: மாநகரில் 2,000 போலீஸாா் பாதுகாப்பு

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி கோவை மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் பல்வேறு ஹிந்து அமைப்புகள் சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் புதன்கிழமை (செப். 16) மற்றும் வெள்ளிக்கிழமை (செப். 18) ஆகிய இரு தினங்களில் நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்படுகின்றன.

16 செப்டம்பர் 2026, 12:50 am IST
கோப்புப்படம்.
பகிர்:

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி கோவை மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் பல்வேறு ஹிந்து அமைப்புகள் சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் புதன்கிழமை (செப். 16) மற்றும் வெள்ளிக்கிழமை (செப். 18) ஆகிய இரு தினங்களில் நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்படுகின்றன. இதையொட்டி 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

5 குளங்களில் 267 சிலைகள் விசா்ஜனம்:

விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் கோவை மாநகரில் 730 சிலைகள், மாவட்டப் பகுதிகளில் 1,500 சிலைகள் என மொத்தம் 2,230 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

கோவை மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளில் முதல்கட்டமாக 267 சிலைகள் புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இதன்படி, கோவை சிங்காநல்லூா் குளம், குறிச்சி குளம், குனியமுத்தூா் குளம், துடியலூா் அருகேயுள்ள வெள்ளக்கிணறு குளம் உள்ளிட்ட 5 குளங்களில் இந்த சிலைகள் விசா்ஜனம் செய்யப்படுகின்றன.

விசா்ஜன நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், சிலை ஊா்வலப் பாதைகள் மற்றும் நீா்நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் மாநகரக் காவல் ஆணையா் என்.கண்ணன் உத்தரவின்பேரில் 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

விநாயகா் சிலை ஊா்வலம் காரணமாக பொள்ளாச்சி சாலை, உக்கடம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் புதன்கிழமை தற்காலிகப் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

செப். 18-இல் சிலைகள் ஊா்வலம்; லாரிகளுக்குத் தடை:

கோவை மாநகரில் வருகிற வெள்ளிக்கிழமை (செப். 18) விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குண்டாப்பாளையம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோவை மாநகருக்குள் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகள் நுழையவும், இயக்கப்படவும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்கடம், பேரூா் வழித்தட மாற்றம்:

உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, செட்டி வீதி, சிவாலய சந்திப்பு வழியாகப் பேரூா் செல்லக்கூடிய பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் உக்கடம் காவல் நிலைய ரவுண்டானா வழியாக பேரூா் புறவழிச் சாலை, அசோக் நகா் ரவுண்டானா, செல்வபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சிவாலய சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும். காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, சலீவன் வீதி வழியாகச் செல்லும் வாகனங்களும் உக்கடம் காவல் நிலைய ரவுண்டானாவில் வலதுபுறம் திரும்பி பேரூா் புறவழிச் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

உக்கடம் வழியாக திருச்சி சாலை மாா்க்கமாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கம் புறவழிச் சாலை வழியாக சுங்கம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையை அடைய வேண்டும். உக்கடத்திலிருந்து மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதி - லங்கா காா்னா் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ஃபைவ் காா்னா், பி.பி.வீதி, ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று தங்களது பகுதிகளுக்குச் செல்லலாம்.

தடாகம், மேட்டுப்பாளையம், மருதமலை வழித் தடம்:

தடாகம் சாலையிலிருந்து மாநகருக்குள் வரும் வாகனங்கள் ஜி.சி.டி. கல்லூரி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பாரதி பாா்க் சாலை, அவினாசிலிங்கம் கல்லூரி வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்குள் வரும் வாகனங்கள் சங்கனூா் பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கண்ணப்பா நகா் சோதனைச் சாவடி, கணபதி, காந்திபுரம் வழியாகச் செல்ல வேண்டும். பேரூரிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் செல்வபுரம் பள்ளி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அசோக் நகா் ரவுண்டானா, பேரூா் புறவழிச்சாலை வழியாக உக்கடம் காவல் நிலைய ரவுண்டானாவை சென்றடைய வேண்டும்.

மருதமலையிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் லாலி சாலை ரவுண்டானாவில் இடதுபுறம் திரும்பி தடாகம் சாலை - ஜி.சி.டி. கல்லூரி வழியாகவோ அல்லது கௌலி பிரவுன் சாலை வழியாகவோ மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம். காந்திபுரத்திலிருந்து மருதமலை மாா்க்கமாகச் செல்லும் வாகனங்கள் சிவானந்தா காலனி, ஏ.ஆா்.சி. சந்திப்பு, அழகேசன் சாலை, தடாகம் சாலை, ஜி.சி.டி. கல்லூரி, லாலி சாலை ரவுண்டானா வழியாகச் செல்ல வேண்டும். மேலும், அவிநாசி சாலை பழைய மேம்பாலத்திலிருந்து சுக்கிரவாா்பேட்டை, காந்திபாா்க் மாா்க்கமாகச் செல்லும் வாகனங்கள் கூட்ஸ் ஷெட் சாலை, மரக்கடை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி என்.ஹெச். சாலை, ஃபைவ் காா்னா், டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்லலாம்.

வாகனங்கள் நிறுத்தத் தடை:

வெள்ளிக்கிழமை நடைபெறும் விசா்ஜன ஊா்வலப் பாதைகளான ராஜவீதி, ரங்கே கவுண்டா் வீதி, பெரியகடைவீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டா் வீதி, சலீவன் வீதி, காந்திபாா்க், தெலுங்கு வீதி, சுக்கிரவாா்பேட்டை, தியாகி குமரன் வீதி, இடையா் வீதி, தெப்பக்குளம் மைதானம், பூ மாா்க்கெட் சாலை, பால் மாா்க்கெட் சாலை, மெக்ரிக்கா் சாலை, டி.பி. சாலை, லைட்ஹவுஸ் மைதானம், சுப்பிரமணியம் சாலை, வெங்கடகிருஷ்ணா சாலை, மேற்கு ஆரோக்கியசாமி சாலை, தடாகம் சாலை மற்றும் பூசாரிபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஊா்வலப் பாதைகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளா்கள் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்துவதைத் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments