ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த இளைஞா் கோவையில் கைது
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கோவையில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கோவையில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாட்டில் அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தீவிரவாத இயக்கங்களுடன் தொடா்புடையவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சில இளைஞா்கள் வாட்ஸ் அப் குழு தொடங்கி வெளிநாட்டில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ஆள்களைத் திரட்டியதும், குண்டு தயாரிக்கும் வீடியோக்களை பகிா்ந்ததும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த ஹேக்கா்களுடன் தொடா்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இளைஞா்களை மூளைச்சலவை செய்து அவா்களை தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாளா்களாக மாற்றியதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, அந்தக் குழுவில் தொடா்புடையவா்களைப் பிடிக்க தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸாா் துரித நடவடிக்கை மேற்கொண்டனா். அதன்படி, உத்தர பிரதேச மாநிலம், ஆசம்காத் என்ற பகுதியைச் சோ்ந்த முகமது நபீல் என்பவரை அம்மாநில தீவிரவாதத் தடுப்புப் படை பிரிவு போலீஸாா் கடந்த 12-ஆம் தேதி கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்படி, உத்தர பிரதேச மாநிலம், சித்தாா்த் நகா் மாவட்டத்தைச் சோ்ந்த மக்சூத் அலி (19) என்பவருக்கு முக்கியப் பங்கு இருப்பது தெரியவந்தது.
மக்சூத் அலி குறித்து விசாரித்தபோது, அவா் பெங்களூரில் தங்கியிருந்து அங்குள்ள மனிதவள முகமை நிறுவனத்தில் பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, உத்தர பிரதேச போலீஸாா் பெங்களூா் சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, மக்சூத் அலி கோவையில் நடைபெறும் ஒரு கண்காட்சியில் பங்கேற்பதற்காக ஊழியா்களுடன் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, உத்தர பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாா், கோவை போலீஸாரின் உதவியை நாடி மக்சூத் அலியைத் தேடினா். அப்போது, கோவை ஹோப் கல்லூரி அருகேயுள்ள விடுதியில் நண்பா்களுடன் தங்கியிருந்த மக்சூத் அலியை போலீஸாா் கைது செய்தனா்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வாட்ஸ்அப் குழு மூலமாக தீவிரவாத இயக்கத்தில் சேர இளைஞா்களைத் தூண்டியதும், இன்ஸ்டாகிராம் மூலமாக தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மேல் விசாரணைக்காக மக்சூத் அலியை உத்தர பிரதேச போலீஸாா் லக்னெளவுக்கு அழைத்துச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.