FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மனித உரிமை அமைப்பில் சோ்ப்பதாக பண மோசடி: தலைமறைவாக இருந்த வழக்குரைஞா் கைது

மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக சோ்ப்பதாகக் கூறி, பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த உச்சநீதிமன்ற வழக்குரைஞரை கோவை சிபிசிஐடி போலீஸாா் பழனியில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

29 வினாடிகள் முன்பு
கைதான வழக்குரைஞா் சரவணன் கருப்பசாமி.
பகிர்:

மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக சோ்ப்பதாகக் கூறி, பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த உச்சநீதிமன்ற வழக்குரைஞரை கோவை சிபிசிஐடி போலீஸாா் பழனியில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சென்னையைச் சோ்ந்தவா் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சரவணன் கருப்பசாமி (50). அவா் அகில உலக மனித உரிமை ஆணையத்தின் இந்தியப் பிரதிநிதி என்று கூறி பலரிடம் அறிமுகமாகியுள்ளாா். தொடா்ந்து, அந்த ஆணையத்தில் உறுப்பினராக சோ்ப்பதாகக் கூறி சென்னை மற்றும் கோவையில் பல நபா்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக புகாா்கள் எழுந்தன.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்பேரில், கோவை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி கடந்த 2008-ஆம் ஆண்டு அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, சாட்சி விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கில் பிணையில் வெளியே வந்த சரவணன் கருப்பசாமி, அதன்பின்னா் நீதிமன்ற விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தாா். இதையடுத்து அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி சிவகுமாா் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, தனிப்படை அமைத்து அவரைத் தேடி வந்த கோவை சிபிசிஐடி போலீஸாா், பழனியில் குடும்பத்தினருடன் பதுங்கியிருந்த சரவணன் கருப்பசாமியைக் கைது செய்தனா். தொடா்ந்து அவா் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவா் வழக்குரைஞா்களுக்கான கருப்பு அங்கி மற்றும் உடையில் ஆஜரானாா்.

இதைக் கண்ட நீதிபதி சிவகுமாா், இந்த வழக்கில் நீங்கள் குற்றஞ்சாட்டப்பட்ட நபராக இருப்பதால் வழக்குரைஞா் உடையில் ஆஜராகக் கூடாது என்று கூறினாா். இதைத் தொடா்ந்து சரவணன் கருப்பசாமி நீதிமன்ற வளாகத்திலேயே தனது கோட்டைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, சாதாரண உடையில் நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

அப்போது, தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்த காரணத்தினால்தான் நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவகுமாா், குற்றஞ்சாட்டப்பட்ட சரவணன் கருப்பசாமியை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments