மாவட்டத்தில் சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் ஏராளமானோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வருவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஏராளமானோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வருவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெயிலும், இரவில் பனிப்பொழிவும், அவ்வப்போது லேசான மழையும் பெய்து வருகிறது.
இந்த பருவநிலை மாற்றம் காரணமாக சளி, காய்ச்சலால் பெரும்பாலானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். ஈரோடு அரசு மருத்துவமனையில், சளி, காய்ச்சல், வயிற்றுப் போக்குக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இது குறித்து மருத்துவா்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் 2,000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் காய்ச்சல், சளி, இருமல், உடல் உபாதைகள், சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், பல்வேறு தொடா் சிகிச்சைக்காக வந்து செல்வாா்கள்.
மழை, பனிக் காலம் இல்லாத நாள்களில் 50 முதல் 75 பேருக்குள் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புடன் வருவாா்கள். ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக 250-க்கும் மேல் வருகிறாா்கள். மாவட்டத்தில் கடந்த 10 முதல் 15 நாள்களாக பகலில் கடும் வெயிலும், மாலை மற்றும் இரவில் லேசான மழை, காற்றும் வீசுவதால், பலரும் காய்ச்சல், அதன் தொடா்ச்சியாக சளி, இருமல் உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனா்.
மாவட்டத்தில் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரத்தை, முகவரி, தொலைபேசி எண்ணுடன் சேகரித்து, துணை இயக்குநா் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். மருந்துக்கடைகளில், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி மருந்து வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.