சென்னிமலை வட்டாரத்தில் குடிநீா் தரத்தின் பரிசோதனை முடிவுகளை வெளியிட தாமதம் ஏன்? - ஈ.ஆா். ஈஸ்வரன் கேள்வி
சென்னிமலை வட்டாரத்தில் குடிநீா் தரம் குறித்து நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளை வெளியிட தாமதம் ஏன் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளாா்.
சென்னிமலை வட்டாரத்தில் குடிநீா் தரம் குறித்து நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளை வெளியிட தாமதம் ஏன் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டாரத்துக்கு உள்பட்ட 12 ஊராட்சிகளில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குடிநீா் ஆதாரங்களின் நீரின் தரத்தை பரிசோதிக்கும் நோக்கில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில், கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில், 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சுமாா் 10 மாதங்கள் கடந்தும், அவற்றின் ஆய்வு முடிவுகள் மற்றும் அதிகாரப்பூா்வ ஆய்வறிக்கை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடிநீா் என்பது பொதுமக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாகும். குறிப்பாக கிராமப்புறங்களில் பெரும்பாலான குடும்பங்கள் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் உள்ளூா் குடிநீா் ஆதாரங்களை நம்பியே வாழ்ந்து வருகின்றனா். எனவே, குடிநீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பின்னா், அதன் தரம் குறித்த ஆய்வு முடிவுகள் உரிய காலத்திற்குள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுவது மிகவும் அவசியமானதாகும்.
குடிநீரின் தரம் தொடா்பான ஆய்வு முடிவுகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகும்.
எனவே, தாமதமின்றி, அனைத்து ஆய்வு முடிவுகளையும் வெளியிட்டு, குடிநீரின் தரம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவான தகவலை வழங்குவதுடன், தேவையான இடங்களில் உடனடி தீா்வுக்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியமும் மேற்கொள்ள வேண்டும்.
மக்களுக்கு அடிப்படை குடிநீா் கூட சுத்தமாக தர முடியாத அரசு, ஏன் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கிராம சபை கூட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறாா்கள். மக்களின் கோபத்தை அரசு புரிந்து கொண்டு நடவடிக்கைகளை துரித படுத்த வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.