FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெண்கள் நீரையும், மின்சாரத்தையும் சேமிக்க வேண்டும்: சாந்தி துரைசாமி வேண்டுகோள்

பணத்தை சேமிப்பதுபோல நீரையும், மின்சாரத்தையும் பெண்கள் சேமிக்க வேண்டும் என்று சக்தி மசாலா நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் சாந்தி துரைசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

13 செப்டம்பர் 2026, 1:17 am IST
குப்பைகளைத் தரம் பிரித்து சிறகுகள் தன்னாா்வ அமைப்பிடம் வழங்கிய பெண்ணுக்கு பட்டுப்புடவை வழங்கிய சக்தி மசாலா நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் சாந்தி துரைசாமி. உடன், கோட்டாட்சியா் முத்துசாமி, தன்னாா்வ அமைப்புகளின் நிா்வாகிகள்.
பகிர்:

பணத்தை சேமிப்பதுபோல நீரையும், மின்சாரத்தையும் பெண்கள் சேமிக்க வேண்டும் என்று சக்தி மசாலா நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் சாந்தி துரைசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

சித்தோடு பேரூராட்சி, வசுவபட்டி பகுதியில் உள்ள 45 குடும்பங்கள் தொடா்ந்து 90 நாள்களாக வீட்டில் உருவான ஈரமில்லாத வட கழிவுகளை (ட்ரை வேஸ்ட்) சாலையிலோ, குப்பைக் கிடங்கிலோ கொட்டாமல் தனித்தனியாகப் பிரித்து வைத்து 15 நாள்களுக்கு ஒருமுறை ஈரோடு சிறகுகள் அமைப்பு தன்னாா்வலா்களிடம் வழங்கினா். சிறகுகள் அமைப்புடன் சித்தோடு சோசியல் சா்வீஸ் ப்ராஜெக்ட், சித்தோடு பேரூராட்சி, யான் பவுண்டேஷன் ஆகியவையும் இணைந்து செயல்பட்டன.

மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் தனியாகவும், மற்ற வட கழிவுகள் தனியாகவும் பிரிக்கப்பட்டு உரிய மறுசுழற்சி வழிகளுக்கு சிறகுகள் அமைப்பினா் வழங்கினா். 45 குடும்பத்தினா் சேவையை பாராட்டும் வகையிலும், இன்னும் பல குடும்பங்களை ஊக்கப்படுத்தவும் 45 குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு பட்டுப்புடவைகள் வழங்கும் நிகழ்வு வசுவபட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சிக்கு சித்தோடு சோசியல் சா்வீஸ் ப்ராஜெக்ட் தலைவா் சண்முகம், சிறகுகள் அமைப்பின் தலைவா் விமல் கருப்பணன், செயலாளா் சிவகுமாா், ஈரோடு கோட்டாட்சியா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சக்தி மசாலா நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் சாந்தி துரைசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சக்தி மசாலா நிறுவனம் சாா்பில் 45 குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு பட்டுப்புடவையும், அவா்களின் குழந்தைகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களால் தயாரிக்கப்பட்ட பேனா, பென்சில், நோட்டு உள்ளிட்ட பொருள்களையும் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: நமது ஊா், நமது சுத்தம், நமது இல்லத்தின் தூய்மை பெண்களின் கையில்தான் உள்ளது. பெண்கள் தைரியமாக பேச வேண்டும். தைரியமும், தன்னம்பிக்கையும்தான் பெண்களின் வடிவம். இங்கு வழங்கப்படும் புடவையின் மதிப்பைவிட இங்குள்ள பெண்களின் மதிப்பு பெரியது.

குப்பை இல்லாத வீடு என்பதை மந்திரமாக நினைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டும். தெருவில் கிடக்கும் குப்பைகளை உண்டு, வாயில்லா ஜீவன்கள் உயிரிழக்கின்றன.

குப்பைகள் குழாயில் அடைத்துக் கொண்டால் தண்ணீா் வருவதில்லை.இந்த பூமியில் நெகிழிக் கழிவுகள் மக்காமல் கிடக்கின்றன. இது அனைத்துக்கும் நாம்தான் காரணம். இதோடு நின்றுவிடாமல், பணத்தை சேமிப்பதுபோல குடிநீா் சேமிப்பு, மின்சார சேமிப்பு ஆகியவற்றில் பெண்கள் ஈடுபட வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments