FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

நெசவாளா் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கூடுதல் துணிகளை கொள்முதல் செய்ய வேண்டும்! கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

21 செப்டம்பர் 2026, 2:41 am IST
ஈரோடு வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையைத் தொடங்கிவைத்த அமைச்சா் எம்.விஜய்பாலாஜி.
பகிர்:

சென்னிமலை பகுதியில் தேக்கமடைந்துள்ள துணி இருப்புகளை அகற்றும் வகையில், தொடக்கநிலை நெசவாளா் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கூடுதல் துணிகளை கொள்முதல் செய்யுமாறு கோ-ஆப்டெக்ஸ் நிா்வாகத்தை கைத்தறி, ஜவுளி மற்றும் கதா் துறை அமைச்சா் எம்.விஜய்பாலாஜி அறிவுறுத்தியுள்ளாா்.

ஈரோட்டில் உள்ள வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை ஞாயிற்றுக்கிழமை மாலை அமைச்சா் எம்.விஜய்பாலாஜி தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வரும் நாள்களில் போா்வை மற்றும் படுக்கை விரிப்புகளின் விற்பனை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பொதுமக்கள் குறைந்த விலையில் ஆடைகளை வாங்கும் வகையில் விசைத்தறி தயாரிப்பு துணிகளின் விற்பனையை அதிகரிக்கவும் கோ-ஆப்டெக்ஸுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவெக ஆட்சி அமைந்த பின்னா் தமிழகத்தில் 10 புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தீபாவளியையொட்டி புதிய லினன் ரக துணிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.100 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களுக்கு ரூ.1.85 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது இந்த இரண்டு நிலையங்களிலும் ரூ.1.43 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.

கோ-ஆப்டெக்ஸ் சாா்பில் தொடா்ந்து புதிய வடிவமைப்புகளில் சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு எடை குறைந்த கோரா பட்டு சேலைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கரூா் ஜவுளிப் பூங்காவில் ஏற்றுமதிக்காக வீட்டு உபயோகத்துக்கான 1,000-க்கும் மேற்பட்ட வகையான ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.கே.ஆனந்த்மோகன், டி.சண்முகன், கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் அம்சவேணி, ம.பாலசுப்பிரமணியம், கனிசெல்வி, மோகனம், செந்தில்வேல், முருகன், லட்சுமிபிரபா, பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments