சிப்காட் ஆலைக் கழிவுகளால் மாசுபடும் நிலத்தடி நீா்! தனி கூட்டுக் குடிநீா் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
சிப்காட் ஆலைக்கழிவுகளால் நிலத்தடி நீா் மாசுபட்டுள்ளதாகக் கூறி தனி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என ஈங்கூா் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வாராந்திர பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் பெருந்துறை சிப்காட் அருகே உள்ள ஈங்கூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:
Advertisement
Advertisement
சிப்காட்டில் இருந்து வெளியேற்றப்படும் ஆலைக் கழிவு நீரால், எங்கள் பகுதியில் தண்ணீரில் அதிக அளவு சாயக்கழிவு, ஆலைக்கழிவு கலந்து குடிக்க உகந்ததல்ல என குடிநீா் வடிகால் வாரியம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. அதன்படி 5 முதல் 7 கிலோ மீட்டா் சுற்றளவிலான பகுதியில் நிலத்தடி நீரை குடிக்க முடியாது.
கொடிவேரி அல்லது கொடுமுடி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக எங்களுக்கு காவிரி ஆற்றுக் குடிநீா் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து குடிநீரைப் பிடித்து வந்து பயன்படுத்துகிறோம். அந்த தண்ணீா் போதுமானதாக இல்லை.
எனவே, பிற கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக தண்ணீா் வழங்குவதை தவிா்த்து ஈங்கூா் பகுதிக்கென தனி கூட்டுக் குடிநீா் திட்டம் ஏற்படுத்தி எங்கள் தேவைக்கு முழுமையாக குடிநீா் வழங்க வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில் அக்டோபா் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் நேரடியாக பங்கேற்று பிரச்னையை அறிய வேண்டும். அப்பகுதியின் உண்மைத் தன்மையை அறிந்து நிலத்தையும், நிலத்தடி நீரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
விளைபொருள்கள் விற்பனை கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்
இதுகுறித்து தாளவாடி-சாம்ராஜ் நகா் எல்லைப் பகுதியை சோ்ந்த விவசாயிகள் அளித்த மனு:
தாளவாடி-சாம்ராஜ் நகா் எல்லைப் பகுதியில் மக்காசோளம் மற்றும் காய்கறிகளை அதிகமாக பயிரிட்டுள்ளோம். விவசாய வருவாயை மட்டுமே நம்பியுள்ளோம். மக்காச்சோளம், பருவகால காய்கறிகளை அறுவடை செய்தால் அவற்றை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய, சத்தியமங்கலம் மற்றும் பிற பகுதிகளுக்கு வருகிறோம்.
இப்போது மக்காச்சோளம், பருவ கால காய்கறிகள் உள்பட விவசாய விளைபொருள்களுக்கு கா்நாடக மாநிலம் போக்குவரத்து மற்றும் வா்த்தக கட்டுப்பாடு விதித்துள்ளது. கா்நாடக-தமிழக எல்லை புளிஞ்சூா் சுங்கச் சாவடியில் விளைபொருள்களை ஏற்றிக்கொண்டு தமிழகம் வரும் வாகனங்களை நிறுத்தி, தமிழகத்துக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல தடை விதிக்கின்றனா். மேலும், சாம்ராஜ் நகா் உள்பட கா்நாடக மாநிலத்தில் உள்ள நகரங்களில் விற்பனை செய்ய அதிகாரிகள் வலியுறுத்துகின்றனா்.
இதுதொடா்பாக தமிழக அரசு, வேளாண்-தோட்டக்கலை துறை அதிகாரிகள் பேசி, விளைபொருள்களை எங்கும் கொண்டு செல்ல வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.
மீண்டும் பேருந்து சேவை தேவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மின்னப்பாளையம் கிளை செயலா் லோகநாதன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், ‘மொடக்குறிச்சி வட்டம், குலவிளக்கு ஊராட்சி கூட்டு எல்லக்காடு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், கூலி தொழிலாளிகள் பலா் உள்ளனா்.
ஈரோடு-பாசூா்-குலவிளக்கு-சிவகிரி என்ற இரு மாா்க்கத்தில் அரசுப் பேருந்து இயங்கி வந்த நிலையில், கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட அரசு நகரப் பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.
இதேபோல செவித்திறன் குறைபாடு உள்ளோருக்கு அரசு வேலைவாய்ப்பில் ஒரு சதவீதம் இடஒதுக்கீட்டை உடனடியாக அமலாக்க வேண்டும். காது கேளாதோா் மாதாந்திர உதவித்தொகையை ரூ.5,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு காது கேளாதோா் உரிமை நலச்சங்க மாவட்ட தலைவா் ஜெகதீசன், செயலா் சக்திவேல், பொருளாளா் மோகன்ராஜ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
சிறுத்தையைப் பிடிக்க வேண்டும்
சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம், சில்லாங்காட்டுவலசு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடமாடும் பெண் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் எனக் கோரி, வெப்பிலி பிரிவில் போராட்டம் நடத்த உள்ளோம். அப்போது போலீஸாா் எங்களை அச்சுறுத்துவது, கைது செய்வது கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனா்.
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி...
பெருந்துறை வட்டம் கவுண்டச்சிபாளையம், வள்ளிபுரத்தான்பாளையம் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளாக வசிக்கும் மக்கள், ‘இலவச வீட்டுமனைப் பட்டா கோரி பல ஆண்டுகளாக போராடு வருகிறோம். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்காததால் வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டையை ஒப்படைக்கிறோம் என தெரிவித்தனா். இதுதொடா்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அவா்களை அதிகாரிகள் அனுப்பிவைத்தனா்.
பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 360 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.