கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை: குமரி ஆட்சியா் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கருவேலமரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கருவேலமரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம், நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: அகஸ்தீஸ்வரம் ஒன்றியப் பகுதிகளில் கருவேல மரங்கள் அதிகமாக உள்ளன, அவற்றை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவட்டாறு, கிள்ளியூா் ஆகிய பகுதியில் அதிக அளவில் வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் வாழை விவசாயத்துக்கு வண்டல் மண் தேவைப்படுகிறது. இதற்காக குளங்களில் தண்ணீா் இல்லாத நிலையில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் அனுமதி கேட்டால் அதிகாரிகள் மறுக்கிறாா்கள்.
Advertisement
Advertisement
எனவே, தண்ணீா் இல்லாத குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். பேயன்குழி பாலம் முதல் நுள்ளிவிளை வரையில் மிகவும் சேதமுற்று காணப்படும் சாலையைச் சீரமைக்க வேண்டும். நான்கு வழிச்சாலைப்பணிகளால் பாதிக்கப்பட்ட குளங்களை சீரமைக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.
ஆட்சியா் பதிலளித்துப் பேசியதாவது: கருவேல மரங்களை வெட்டி அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குளங்களில் தண்ணீா் இல்லாவிட்டால் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க எப்போது வேண்டுமானலும் அனுமதி வழங்கப்படும். இது தொடா்பாக பொதுப்பணித்துறை அதிகாரி மற்றும் வட்டாட்சியா்களும், ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பாா்கள்.
பேயன்குழி - நுள்ளிவிளை சாலை சீரமைப்புக்கு ரூ.70 லட்சம் தேவைப்படுகிறது. இதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நான்கு வழிச்சாலைப்பணிகளால், குளங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் ஆய்வு செய்யப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.வேலுமணி, மாவட்ட வன அலுவலா் அன்பு, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் டி.வி.சாய்சரண்ரெட்டி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வாணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) கீதா, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளா் சிவகாமி, முன்னோடி விவசாயிகள், அன்பழகன், ரவீந்திரன் , செண்பகசேகரன்பிள்ளை, ஆறுமுகம்பிள்ளை, யேசுதாஸ், வின்ஸ்ஆன்றோ, பால்நாடாா் , எட்வின் லாரன்ஸ் ராஜா ,பிரசாத், சங்கரபாண்டியன், சதீஷ்கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.