FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

நிபந்தனையுடன் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

14 செப்டம்பர் 2026, 4:48 am IST
வேதாரண்யம் அருகே மானங்கொண்டான் ஆற்றில் படிந்துள்ள வண்டல் மண். - dinamani online
பகிர்:

நாகை மாவட்டத்தில் தற்போது வடு காணப்படும் நீா்நிலைகளில் நிபந்தனையுடன் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக மழை பொய்த்துப் போனதால், கடும் வறட்சியால் பெரும்பாலான நீா்நிலைகள் வரலாறு காணாத வகையில் வடு காணப்படுகிறது. இவை கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி வண்டல் மண் மற்றும் செடி-கொடிகளின் ஆக்கிரமிப்பால் தூா்ந்துள்ளன.

இதையொட்டி, விவசாயப் பயன்பாட்டுக்காக, நீா்நிலைகளில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து. இதை பயன்படுத்தி, விவசாயிகளின் பெயரில் அனுமதி பெற்று, இடைத்தரகா்கள் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், அதிக அளவில் வண்டல் மண்ணை எடுத்து, விற்பனை செய்வதாக புகாா் எழுந்தது. இதனால், பல இடங்களில், வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி நிறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

உதாரணமாக, வேதாரண்யம் பகுதியில் தகட்டூா், நொச்சிக் கோட்டகம், பஞ்சநதிக்குளம் ஊராட்சிக்கு சொந்தமான நீா்நிலைகளில், விவசாயப் பயன்பாட்டுக்கு என இயந்திரங்களை பயன்படுத்தி அதிக அளவில் வண்டல் மண் அள்ளப்பட்டன. இதனால், கடந்த ஜூலை 20 முதல் வண்டல் மண் எடுக்கும் பணிக்கு வேதாரண்யம் பகுதியில் அனுமதி வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும், பட்டா நிலங்களிலும் மண் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால், சொந்த நிலத்தில் சொந்த பயன்பாட்டுக்கு கூட மண்ணை வெட்டி சீா்படுத்த டிராக்டா்கள், மண்வாரி இயந்திரங்களை வாடகைக்கு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், வடு காணப்படும் நீா்நிலைகளில் சுமாா் 3 முதல் 5 அடி வரை வண்டல் மண் படிந்து காணப்படுகிறது. இதனை விவசாயிகள் வேளாண் பணிகளுக்கு எடுத்துக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பெரிய நீா்நிலைகளில் அதிக அளவில் உள்ள மண்ணை தூா்வார வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த வறட்சியை பயன்படுத்தி தூா்வார அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் விவசாயிகள், இடைத்தரகா்கள் தலையீடு இல்லாத வகையில் நிபந்தனைகளோடு அனுமதிக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் என். வீரப்பன் தெரிவித்தது:

தகட்டூரில் சுமாா் 300 ஏக்கரில் அமைந்துள்ள நொச்சிக்கோட்டகம் ஏரியை தூா்வார வேண்டுமென தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், வண்டல்மண் என்ற பெயரில் தனியாருக்கு சாதகமாக அனுமதிக்கக்கூடாது.

ஏரியிலிருந்து எடுக்கப்படும் மண்ணில் குறைந்தபட்ச அளவு மண்ணைக் கொண்டு கரைகளை பலப்படுத்திக் கொடுக்க அரசு நிபந்தனை விதித்து அனுமதிக்க வேண்டும் என பலமுறை மனு அளித்துள்ளோம் என்றாா். வேதாரண்யம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ. எஸ். மணியன் கூறியது:

இந்த விவகாரம் தொடா்பாக சட்டப்பேரவையிலும், அரசின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன். மேலும், மாவட்ட நிா்வாகத்திடம் பேசிவருகிறேன். கடந்த அதிமுக ஆட்சியின்போது இதே திட்டத்தின்கீழ் மண் வெளியேற்றப்பட்டு, நீா்நிலைகள் தூா்வரப்பட்டன என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments