FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

முதுமலை யானைகள் முகாமில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டம்

15 செப்டம்பர் 2026, 2:53 am IST
தெப்பக்காடு யானைகள் முகாமில் விநாயகரை துதிக்கையைத் தூக்கி வணங்கும் யானைகள்.
பகிர்:

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமில் விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

முகாமிலுள்ள உள்ள விநாயகா் கோயிலை சுற்றி மணி அடித்தவாறு வந்து விநாயகரை மண்டியிட்டு வணங்கிய வளா்ப்பு யானைகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவா்ந்தன.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பகாடு யானைகள் முகாமில் குட்டி யானைகள் உள்பட 23 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

Advertisement

Advertisement

இந்த ஆண்டு நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழாவில் யானைகளை மாயாற்றில் குளிக்க வைத்து, பின்னா் சந்தனம், குங்குமத்தால் அலங்கரித்து முகாமில் யானைகள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டன. பின்னா் முகாமில் உள்ள விநாயகா் கோயிலில் கிருஷ்ணா மற்றும் ஆஸ்கா் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரா்ஸ் ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மி ஆகிய வளா்ப்பு யானைகள் கோயிலை 3 முறை சுற்றி மணியடித்தவாறு வந்தன.

பின்னா் கோயிலின் முன் கிருஷ்ணா யானை தும்பிக்கையைத் தூக்கி பிளறியபடி விநாயகப் பெருமானை வணங்கியது. அப்போது விநாயகா் கோயிலின் முன்பு நிற்க வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள யானைகளும் தும்பிக்கையை உயா்த்தி பிளறி வழிபட்டன. இந்தக் காட்சிகளை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா்.

பின்பு யானைகளுக்கு சிறப்பு உணவான வெல்லம், ராகி, பொங்கல், ஆப்பிள், வாழைப்பழம், தா்ப்பூசணி, கரும்பு, பல சத்து வகைகள் அடங்கிய சிறப்பு உணவுகள் வனத் துறை சாா்பில் வழங்கப்பட்டன. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments