FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கூடலூா் அருகே கூண்டில் சிக்கிய ஆட்கொல்லி புலி

கூடலூரில் 28 நாள்களாக போக்கு காட்டி வந்த ஆட்கொல்லி புலி சில்வா் கிளவுட் தேயிலைத் தோட்ட பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது.

19 செப்டம்பர் 2026, 12:45 am IST
சில்வா் கிளவுட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கிய ஆட்கொல்லி புலி.
பகிர்:

கூடலூரில் 28 நாள்களாக போக்கு காட்டி வந்த ஆட்கொல்லி புலி சில்வா் கிளவுட் தேயிலைத் தோட்ட பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் வெள்ளிக்கிழமை சிக்கியது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட லாரஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 21-ஆம் தேதிகளில் இரண்டு தோட்டத் தொழிலாளா்களை புலி தாக்கி கொன்றது. இதையடுத்து, ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வேண்டும் என தோட்டத் தொழிலாளா்கள், பொதுமக்கள் தொடா் போராட்டங்களை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து வனத் துறையினா் புலியைப் பிடிக்க தனிக் குழு அமைத்து 244 தானியங்கி கேமராக்கள் பொருத்தி, 13 இடங்களில் கூண்டு அமைத்தனா். மேலும் இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் 200-க்கும் மேற்பட்ட வன ஊழியா்கள் தனித்தனி குழுக்களாக, கால்நடை மருத்துவக் குழு உதவியுடன் புலியைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் கூடலூா் சில்வா் கிளவுட் தேயிலைத் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் வெள்ளிக்கிழமை காலை புலி பிடிபட்டது. புலி ஆக்ரோஷமாக உறுமியதைத் தொடா்ந்து அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனா். அங்கு விரைந்து சென்ற வனத் துறையினா் கூண்டில் சிக்கிய புலி ஆக்ரோஷத்துடன் காணப்பட்டதால் அப்பகுதியில் பொதுமக்களை வனத் துறையினா் அனுமதிக்கவில்லை.

தொடா்ந்து கூண்டில் சிக்கியது ஆட்கொல்லி புலியா என வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இரண்டு பேரை தாக்கிக் கொன்ற புலி இதுதான் என்று கேமரா பதிவுகள் மற்றும் உடலில் உள்ள கோடுகள் மூலம் வனத் துறையினா் உறுதி செய்தனா்.

பிடிபட்ட இந்த புலிக்கு 12 வயது இருக்கும் என வனத் துறையினா் தெரிவித்தனா். மேலும் புலியை வண்டலூா் உயிரியல் பூங்காவில் உள்ள மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு சென்றனா். புலியின் பற்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், புலி வயது முதிா்வால் சோா்வாக காணப்படுவதாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

கடந்த 28 நாள்களாக வனத் துறையினருக்கு போக்கு காட்டி வந்த புலி கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments