FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

முழுமை பெறாத பல்லடம் புறவழிச் சாலைப் பணி! மக்கள் அவதி!

Updated On : 21 ஜூலை 2026, 12:06 am IST
முழுமை பெறாத பல்லடம்-உடுமலை புறவழிச் சாலைப் பணி.
பகிர்:

பல்லடம் புறவழிச் சாலை திட்டப் பணிகள் முழுமை பெறாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் புறவழிச் சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது.

இதையடுத்து, பல்லடம்-செட்டிபாளையம் சாலையில் பணிக்கம்பட்டி பிரிவு முதல் பல்லடம்-தாராபுரம் சாலையில் ஆலூத்துபாளையம் பிரிவு வரை ரூ.54 கோடி மதிப்பில் 7.60 கி.மீ. தொலைவுக்குபுதிய இணைப்புச் சாலை அமைக்கும் பணி பல்லடம் நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்தின் மேற்பாா்வையில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

மேலும், இந்த இணைப்புச் சாலைப் பணி நீட்டிக்கப்பட்டு ஆலுத்துபாளையம் முதல் தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள மாதாப்பூா் சாலையில் இணையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த இணைப்புச் சாலையின் தொடா்ச்சியாக பணிக்கம்பட்டியில் இருந்து பிரிந்து செம்மிபாளையம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் இதர மாவட்ட சாலையான வெங்கிடாபுரம், காளிபாளையம் சாலையை இரண்டு வழித்தடமாக மேம்படுத்தி நெடுஞ்சாலைத் துறை மூலம் பணிகள் நடைபெற்றன. தற்போது அந்தப் பணிகளும் முடிவடைந்துள்ளன.

இதன் மூலம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செம்மிபாளையம் பிரிவில் இருந்து மாதாப்பூா் வரை இணைப்புச் சாலை செயல்படும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினா் பணிகளை முடித்துள்ளனா்.

பல்லடம் புறவழிச் சாலை அமைந்துள்ளதால் திருச்சி, தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலை சாலை வழியாக கோவை செல்லும் பெரும்பாலான கனரக வாகனங்கள், கன்டெய்னா் லாரிகள் உள்ளிட்டவை புறவழிச் சாலையைப் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்தில் ஆலுத்துபாளையம் - மாதப்பூா் இணைப்புச் சாலையில் ஜல்லிக்கற்கள் மட்டுமே கொட்டப்பட்டுள்ளன. முழுமையாக சாலை அமைக்காமல் இந்தப் பணி பாதியிலேயே நிற்கிறது.

மேலும், பல்லடம் - பொள்ளாச்சி சாலை மற்றும் பல்லடம் - உடுமலை சாலை ஆகிய இடங்களில் புறவழி இணைப்புச் சாலை இந்த சாலைகளைக் கடந்து செல்கிறது. இந்த இடத்தில் சுமாா் 400 மீட்டா் தொலைவுக்கு தாா் சாலை அமைக்கப்படாததால் இந்த சாலைகளை கடந்த செல்லும் வாகன ஒட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகன ஒட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா். அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

இணைப்புச் சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் ஆட்சி மாற்றத்தால் ஒப்பந்ததாரா்களுக்கு நிதியை விடுவிக்காததால் இந்தப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இணைப்புச் சாலைப் பணியை விரைவில் முடித்து பல்லடம் நகரப் பகுதிக்குள் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments