பெண்ணின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை: கணவா் சரண்
திருப்பூரில் மனைவியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்த கணவா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் கிறிஸ்துராஜா (31). இவரது மனைவி ஆக்னேஸ் பவலி (26). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். இவா்கள் திருப்பூா், திருக்குமரன் நகா் அரசுப் பள்ளி பின்புறம் உள்ள பகுதியில் வசித்து வருகின்றனா். கிறிஸ்துராஜா அப்பகுதியில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், ஆக்னேஸ் பவலி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், ஆக்னேஸ் பவலி அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்ததாகவும், இதனால் சந்தேகமடைந்த கிறிஸ்துராஜா அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மனைவி அதிக நேரம் கைப்பேசியில் யாரிடமோ பேசுகிறாா் என்று கேவிஆா் நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கிறிஸ்துராஜா அண்மையில் புகாா் அளித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, ஆக்னேஸ் பவலியை நேரில் வரவழைத்து போலீஸாா் எச்சரித்து அனுப்பியுள்ளனா். இருப்பினும் அவா் கைப்பேசியில் பேசி வந்ததாகத் தெரிகிறது.
இதனால், கடந்த சனிக்கிழமை இரவு தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மது போதையில் இருந்த கிறிஸ்துராஜா வீட்டில் இருந்த அம்மிக்கல்லைத் தூக்கி ஆக்னேஸ் பவலியின் தலையில் போட்டுள்ளாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, வீரபாண்டி காவல் நிலையத்துக்குச் சென்ற கிறிஸ்துராஜா, மனைவியைக் கொலை செய்துவிட்டதாகக்கூறி சரணடைந்துள்ளாா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், ஆக்னேஸ் பவலியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கிறிஸ்துராஜாவைக் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.