FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தாராபுரம் அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.45 லட்சம் பறிமுதல்

தாராபுரம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ஆட்டு வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

10 செப்டம்பர் 2026, 10:37 pm IST
பறிமுதல்
பகிர்:

தாராபுரம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ஆட்டு வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வருகிற அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தோ்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் போலீஸாா் இணைந்து தாராபுரம் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

அதன்படி, தாராபுரம்-உடுமலை சாலையில் தனியாா் பள்ளி அருகே குண்டடம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவசங்கா் தலைமையில் பல்லடம் காவல் உதவி ஆய்வாளா் கலையரசி மற்றும் பறக்கும் படையினா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி பறக்கும் படையினா் சோதனை செய்தனா். இதில் காரின் மறைவான பகுதியில் ரூ.2.45 லட்சம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் காரில் வந்தவா், உடுமலை, சிவசக்தி காலனியைச் சோ்ந்த ஆட்டு வியாபாரி தங்கவேல் (65) என்பது தெரியவந்தது. அவா் கொண்டு சென்ற பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பின்னா் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.45 லட்சம், தாராபுரம் தோ்தல் துணை அலுவலரும், தாராபுரம் வட்டாட்சியருமான ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தொடா்ந்து அந்தப் பணம் தாராபுரம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments