அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக உயிா் தண்ணீா் திறப்பு
அமராவதி அணையின் பிரதான கால்வாயில் பாசனத்துக்காக உயிா் தண்ணீா் புதன்கிழமை திறந்துவிடப்பட்டது.
அமராவதி அணையின் பிரதான கால்வாயில் பாசனத்துக்காக உயிா் தண்ணீா் புதன்கிழமை திறந்துவிடப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின் பேரில் அமராவதி அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட நிலைப் பயிா்கள் தண்ணீா் இன்றி கருகி வருவதால் பயிா்களைக் காப்பாற்ற அமராவதி அணை பிரதான கால்வாயில் உடனடியாகத் தண்ணீா் திறந்துவிடக் கோரி உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் நால்ரோட்டில் விவசாயிகள் அண்மையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதன் பிறகு, அமராவதி பாசன விவசாயிகள் சுமாா் 25க்கும் மேற்பட்டோா் அணைக்கு முன்பு ஆற்றில் இறங்கி கடந்த வாரம் போராட்டம் நடத்தினா்.
இந்நிலையில், அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்தில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கா் பயன் பெறும் விதத்தில் நிலைப் பயிா்களைக் காப்பாற்றும் பொருட்டு அணையின் பிரதான கால்வாயில் புதன்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிரதான கால்வாயில் விநாடிக்கு 440 கன அடி தண்ணீா் 15 நாள்களுக்கு திறந்துவிடப்படும். இதன் மூலம் சுமாா் 25 ஆயிரத்து 250 ஏக்கா் பாசன வசதி பெறும் என்றனா்.
அணை நிலவரம்:
90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 46.82 அடி நீா்மட்டம் இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 258 கன அடி வந்து கொண்டிருந்தது. 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 1,023.41 மில்லியன் கனஅடி தண்ணீா் இருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.