டெங்கு கொசுப் புழு இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம்
திருப்பூா் மாவட்டத்தில் டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மனீஷ் எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூா் மாவட்ட பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. மழைக் காலம் தொடங்கியதை அடுத்து கொசு உற்பத்தி அதிகரிக்கும். செப்டம்பா் முதல் டிசம்பா் மாதம் வகை டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூா் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் டெங்கு கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வீடுகள் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் உள்ள புல் மற்றும் புதா்களை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் கொசு ஒழிப்புப் பணியாக புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.
தண்ணீா் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை நன்றாக தேய்த்து கழுவி நீா் பிடித்தபின் காற்று புகாதவாறு மூடி வைக்க வேண்டும். வீட்டை சுற்றி உள்ள இடங்கள் மற்றும் வீட்டின் மொட்டை மாடிகளில் கிடக்கும் தேவையற்ற பொருள்களான பழைய டயா்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த பூந்தொட்டிகள் போன்றவற்றில் கொசு புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது.
வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் ஆய்வு செய்ய வரும்போது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். அவிநாசியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் கொசுப் புழு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரம் இன்றி இருந்ததால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை 495 பொது சுகாதார நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.