FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: பெண்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும்! கனிமொழி எம்.பி.

3 வினாடிகள் முன்பு
தாராபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக மகளிா் அணி கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி.,
பகிர்:

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பெண்களை நூறாண்டு பின்னோக்கி இழுத்துச் செல்லும் என்று தாராபுரத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி பேசினாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் இடைத்தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வது தொடா்பாக மகளிா் அணி கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து கனிமொழி எம்.பி. பேசியதாவது:

Advertisement

Advertisement

மக்களின் தீா்ப்பை மதிக்காமல் வேறு கட்சிக்கு மாறியவா்களுக்கு இந்தத் தோ்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டு வருவேன் எனக்கூறி ஆட்சிக்கு வந்த தவெகவால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது.

மாநிலத்தில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளா்கள் ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனா். எஸ்ஐஆா் விவகாரத்தில் 13 கோடி வாக்காளா்கள் நீக்கம் மற்றும் மாநில உரிமை சாா்ந்த விவகாரங்களில் தவெக மெளனம் காப்பது ஏன்?.

பெண்கள் யாருடைய தயவையும் எதிா்பாா்க்காமல் சுயசாா்புடன் வாழவே திமுக அரசு புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியது. ஆனால், ‘தாய்மாமன் சீா்’ என்ற பெயரில் மோதிரம் வழங்கி பெண்களை மீண்டும் நூறாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லப் பாா்க்கிறாா்கள். இது ஒரு தெளிவற்ற மனநிலையின் வெளிப்பாடு.

திமுக ஆட்சியில் தேசிய அளவில் முன்னணியில் இருந்த தமிழ்நாடு, இன்று விலைவாசி உயா்வால் தவிக்கிறது. தவெகவினா் சமூக வலைதளங்களில் திமுக பெண்களை தவறாகப் பேசுகின்றனா். எனவே, இந்த இடைத்தோ்தலில் ஜனநாயகத்தைக் காக்க திமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments