FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நக்சல்பாரி இயக்கத் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்க வந்த 80 பேர் மீது வழக்கு

நக்சல்பாரி இயக்கத் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்க வந்த 80 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

நக்சல்பாரி இயக்கத் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்க வந்த 80 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் பகுதியில் நக்சல்பாரி இயக்கத்தின் தலைவர்கள் எல்.அப்பு, பாலன் ஆகியோருக்கு நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப். 12-ஆம் தேதி (பாலன் நினைவு நாள்) நக்சல்பாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வந்து மலரஞ்சலி செலுத்துவது வழக்கம்.
வழக்கம்போல புதன்கிழமை காலை மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அமைப்பினர் வந்து மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து எல்.அப்பு- பாலன் சிலை பாதுகாப்பு, நில மீட்புக் கூட்டமைப்பு சார்பில் சுமார் 200 பேர் மாலை அணிவிக்க நாயக்கன்கொட்டாய் பேருந்து நிறுத்தப் பகுதியில் கூடினர். 
அப்போது அங்கு ஏற்கெனவே கூடியிருந்த போலீஸார், நிகழ்ச்சிக்கான அனுமதி வழங்கப்படாததைக் கூறி கலைந்து போக அறிவுறுத்தினர். ஆனால், கூடியிருந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் செல்ல முற்பட்டனர். இதனால், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.
அப்போது, 10 பேரை மட்டும் அனுமதிக்கலாம் என போலீஸார் தரப்பில் தெ ரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10 பேர் தவிர மற்றவர்கள் கலைந்து சென்றனர். குறிப்பிட்ட 10 பேர் மட்டும் நினைவிடத்துக்குச் சென்று மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதில் இந்திய கம்யூ. (மாலெமா) கட்சியின் மாநிலச் செயலர் பாலன், சுதந்திர வளர்ச்சிக்கான விவசாயிகள் சங்கத்தின் தமிழ்வாணன், சிபிஐ (எம்எல்) விந்தைவேந்தன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
80 பேர் மீது வழக்கு: இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடுதல், பணியிலிருந்த காவல் துறை அலுவலர்களின் உத்தரவுக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளின் கீழ் 80 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
நெருக்கடி ஏன்?
கடந்த சில ஆண்டுகளாக இதே நாளில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால், தற்போது இந்தப் பதட்டம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து இந்திய கம்யூ. (மாலெமா) கட்சியின் மாநிலச் செயலர் பாலன் கூறியது: 1984-இல் இந்த இடத்தில் நினைவிடம் அமைக்கும்போது அதே ஊரைச் சேர்ந்தவரிடமிருந்து 10 சென்ட் நிலம் ரொக்கம் கொடுத்து கிரயமாகப் பெறப்பட்டது. ஆனால், அந்த நிலத்தில் புறம்போக்கு இடமும் சேர்ந்திருப்பதாகக் கூறி போலீஸார் தற்போது நெருக்கடி தருகின்றனர். இதற்காகத்தான் சிலை பாதுகாப்பு கூட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றார் அவர்.
ஏற்கெனவே 4 பேர் கைது: இந்த நிகழ்ச்சிக்காக சுவரொட்டி ஒட்டியதாக சித்தானந்தம், ரமணி, ராமச்சந்திரன், வேடியப்பன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments