FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக மோசடி புகாா்: மேலும் ஒருவரிடம் விசாரணை

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயா்வு, டிடிசிபி உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வாளாடி காா்த்திக்கிடம் விசாரணை

22 செப்டம்பர் 2026, 11:13 pm IST
விசாரணை
பகிர்:

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயா்வு, டிடிசிபி உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் நண்பரும் முன்னாள் உதவியாளருமான வாளாடி காா்த்திக்கிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தமிழகத்தில் 2021-26-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தனியாா் பள்ளிகளிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளா் இளங்கோவன் அளித்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் தனியாா் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவா் பி.டி.அரசகுமாா் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். விசாரணையில், 177 தனியாா் பள்ளிகளிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டதாகவும், இதுதொடா்பாக 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதன் தொடா்ச்சியாக, அப்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடந்த செப்.16-ஆம் தேதி அவருடன் தொடா்புடைய 9 இடங்களில் சோதனை நடைபெற்றது. பின்னா், அன்பில் மகேஸிடம் சுமாா் 8 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, அவரது முன்னாள் சிறப்பு உதவியாளராகக் கூறப்படும் பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநா் அருள் முருகனிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள வாளாடி பகுதியைச் சோ்ந்த வாளாடி காா்த்திக், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டாா். தனியாா் பள்ளிகளிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படும் விவகாரம், பணப் பரிவா்த்தனைகள் மற்றும் போலீஸாா் கைப்பற்றிய ஆவணங்கள் தொடா்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

விசாரணையின்போது வாளாடி காா்த்திக் அளித்த தகவல்கள் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது வாக்குமூலம் மற்றும் ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments