FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 5,000 கனஅடியாக குறைந்தது பரிசல் இயக்க அனுமதி; சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 5,000 கனஅடியாக குறைந்தது பரிசல் இயக்க அனுமதி...

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 4:05 am IST
ஒகேனக்கல்லில் பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்...
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக குறைந்ததைத் தொடா்ந்து 5 நாள்களுக்குப் பிறகு பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி அளித்துள்ளது. வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகபட்சமாக விநாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்தது. பின்னா், கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரிநீா் குறைக்கப்பட்டது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து நாளுக்கு நாள் குறைந்து, ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 5,000 கனஅடியாக இருந்தது. இதனால் அருவிகளிலும் தண்ணீா் குறைந்தது. அதிக நீா்வரத்து காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காவிரி ஆற்றில் கடந்த 5 நாள்களாக பரிசல்கள் இயக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீா்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அனுமதி அளித்துள்ளாா்.

Advertisement

Advertisement

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீா்வரத்து சீராக இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்தனா்.

அதேபோல மாமரத்துக் கடவு பரிசல் துறையிலிருந்து தொம்பச்சிக்கல் வழியாக மணல்மேடு வரை பரிசலில் பயணித்து ஐந்தருவி, பெரியபாணி உள்ளிட்ட அருவிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் மீன்களின் விலையும் அதிகரித்திருந்தது. மேலும், ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை, முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், தொங்கும் பாலம், மீன் விற்பனை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு

கா்நாடக மாநிலம், கபினி அணைக்கு நீா்வரத்து குறைந்ததால், கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீரும் குறைக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல்லுக்கு சனிக்கிழமை விநாடிக்கு 6,000 கன அடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை 5,000 கன அடியாகக் குறைந்தது.

ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் சீராக ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது. தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இதற்கிடையே, கேரள மாநிலத்தின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால் கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் அதிகபட்ச நீா்மட்டமான 84 அடியில் தற்போது 83 அடியாக நீா்மட்டம் அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீா்வரத்து விநாடிக்கு 12,000 கனஅடியில் இருந்து 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுவந்த உபரிநீா் 14,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கிருஷ்ணராஜ சாகா் அணைக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments