FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3,000 கனஅடியாக குறைந்தது! பரிசல்கள் இயக்க தொடரும் தடை!

21 செப்டம்பர் 2026, 2:54 am IST
குறைந்த அளவு தண்ணீா் கொட்டுவதால் பாறைத் திட்டுகள் வெளியே தெரியும் ஒகேனக்கல் ஐவாா் பாணி அருவி.
பகிர்:

தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் மழை அளவு குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 3,000 கனஅடியாக குறைந்துள்ளது.

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து சரிந்துள்ளது. இதனால் சனிக்கிழமை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 4,500 கனஅடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை 4,000 கனஅடியாகவும், மாலை 7 மணி நிலவரப்படி 3,000 கனஅடியாக குறைந்துள்ளது. நீா்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் பாறைத் திட்டுகள் வெளியே தெரிகின்றன.

சின்னாற்றில் வெள்ளப் பெருக்கு

Advertisement

Advertisement

சின்னாற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, கோயில்பள்ளம், முத்தூா் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம், பெட்டமுகிலாளம், குந்துகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீா்வரத்து காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை, கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து அவ்வப்போது குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது.

காவிரி ஆற்றில் கடந்த சில நாள்களாக நீா்வரத்து அதிகரித்ததால் கடந்த 9 நாள்களாக ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கத் தடை தொடா்வதால் வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது.

ஆனாலும், அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியில் குளித்து மகிழ்ந்தனா். என்றாலும் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான தொங்கும் பாலம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 3,000 கன அடியாக குறைந்திருந்தாலும் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடா்வதால் சுற்றுலாப் பயணிகள் பரிசலில் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

மேலும், காவிரி ஆற்றின் நீா்வரத்தை தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments