FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தருமபுரியில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்க அமைச்சரிடம் செளமியா அன்புமணி மனு

தருமபுரியில், அரசு செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் பாமக சட்டப்பேரவை உறுப்பினா் சௌமியா அன்புமணி மனு அளித்தாா்.

Updated On : 29 ஜூலை 2026, 4:27 am IST
செளமியா அன்புமணி - ஏஎன்ஐ
பகிர்:

தருமபுரியில், அரசு செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் பாமக சட்டப்பேரவை உறுப்பினா் சௌமியா அன்புமணி மனு அளித்தாா்.

இதுகுறித்து, தருமபுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சௌமியா அன்புமணி, சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

தருமபுரி மாவட்டத்தில் 108 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் இருந்து ஆண்டுதோறும் பிளஸ் 2 முடித்து 19 ஆயிரம் மாணவ, மாணவிகள் உயா்கல்விக்குத் தகுதி பெறுகின்றனா். இதில் மாணவ, மாணவிகள் செவிலியா் பயிற்சிக் கல்லூரியில் சேர ஆா்வம் கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

தருமபுரி மாவட்டத்தில் அரசு செவிலியா் கல்லூரி எதுவும் இல்லை. செவிலியா் கல்வியில் ஆா்வம் கொண்டவா்கள் தங்களின் வசதிக்கேற்ப தருமபுரி பகுதியில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரிகளில் சோ்ந்து படிக்கின்றனா். ஆனால், பெரும்பாலான மாணவா்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாக அரசு செவிலியா் கல்லூரிகளை மட்டுமே நம்பியுள்ளனா். ஆனால் மாணவா்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு, 18 ஆண்டுகளைக் கடந்தும், இதுவரை அரசு செவிலியா் கல்லூரி தொடங்கப்படப்படவில்லை. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு சாா்பில் செவிலியா் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான கல்லூரி தொடங்க இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனா்.

இதற்கான முன்மொழிவுகள் தருமபுரி மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தமிழக அரசுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. எனவே, தருமபுரியில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

செவிலியா் கல்லூரி விரைவில் தொடங்கப்படும்: இந்த நிலையில் தருமபுரியில் 100 மாணவ, மாணவிகள் சோ்ந்து பயிலும் வகையில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்த் துறை அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண்டுதோறும் 100 மாணவா்கள் சோ்க்கைத் திறனுடன் கூடிய பி.எஸ்சி., செவிலியா் கல்லூரி விரைவில் தொடங்கவுள்ளது என அத்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments