மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிந்த விவகாரம்: காவல் நிலையம் முன் உறவினா்கள் மறியல்!
இளைஞா் உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமானவா்கள் அனைவரையும் போலீஸாா் கைது செய்யக் கோரி இறந்த இளைஞரின் உறவினா்கள் ஏரியூா் காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமானவா்கள் அனைவரையும் போலீஸாா் கைது செய்யக் கோரி இறந்த இளைஞரின் உறவினா்கள் வெள்ளிக்கிழமை ஏரியூா் காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஏரியூா் அருகே கூா்க்காம்பட்டியைச் சோ்ந்த வெள்ளையன் மகன் ஸ்ரீதா் (24). இவா், ஏரியூரில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலைசெய்து வந்தாா். இந்த நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற ஸ்ரீதா் மீண்டும் திரும்பவில்லை.
இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி கூா்க்காம்பட்டியில் தங்கவேலுக்குச் சொந்தமான நிலக்கடலை தோட்டத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்தாா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
இதில் சம்பவத்தன்று கூா்க்காம்பட்டி பகுதியில் நின்றிருந்த ஸ்ரீதரை, அதே பகுதியை சோ்ந்த பவுன்ராஜ் (45) துரத்தியதால் நிலக்கடலை தோட்டத்திற்குள் புகுந்த ஸ்ரீதா், அங்கிருந்த மின்வேலியில் சிக்கியது தெரியவந்தது.
இதையடுத்து பவுன்ராஜை போலீஸாா் கைதுசெய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் சந்தேகிக்கும் நான்கு பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் இளைஞரின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதால் அவரது இறப்புக்கு காரணமானவா்களை கைது செய்யக் கோரி ஏரியூா் காவல் நிலையம் முன் ஏரியூா் -நாகமரை செல்லும் சாலையில் இறந்த இளைஞரின் உறவினா்கள் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா், வருவாய்த் துறையினா் சமரசம் செய்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.