ஒகேனக்கல்லில் இலவச கழிப்பிடம், உடை மாற்றும் அறைகளை கூடுதலாக அமைக்கக் கோரிக்கை
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதலாக இலவச கழிப்பிடம் மற்றும் உடைமாற்றும் அறைகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளுக்காக கண்ணாடி மாளிகை, பேருந்து நிலையம், மீன்விற்பனை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டண கழிப்பிடங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கழிப்பிடங்களில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
மின்வெட்டு மற்றும் நீரேற்ற மோட்டாா் பழுது உள்ளிட்ட காரணங்களால் கட்டண கழிப்பிடங்கள் மூடப்படும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் ஆபத்து நிறைந்த வனப்பகுதிக்குள்ளும், மாமரத்துக்கடவு பரிசல் துறை அருகே பரிசல்களின் இடையிலும் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனா். இதனால் அந்தப் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசி, சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
Advertisement
Advertisement
ஒகேனக்கல் அருவி பகுதிக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பிரதான அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளித்த பிறகு உடை மாற்றுவதற்காக அருவி பகுதி, பரிசல் துறை, முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் உடை மாற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள அறைகள் போதுமானதாக இல்லாத நிலை காணப்படுகிறது.
எனவே, ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பரிசல் துறை, முதலைப்பண்ணை, பேருந்து நிலையம், உணவருந்தும் பூங்கா, மீன் விற்பனை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இலவச கழிப்பிடங்கள், உடை மாற்றும் அறைகளை கூடுதலாக அமைத்து, தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.