கனிமங்கள் கொண்டுசெல்ல தடை: அத்திப்பள்ளியில் லாரி உரிமையாளா்கள் போராட்டம்
தமிழகத்தில் இருந்து பக்கத்து மாநிலங்களுக்கு கனிமப் பொருள்களை கொண்டுசெல்ல மூன்று மாதங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பப்பெற வலியுறுத்தி, அத்திப்பள்ளியில் டிப்பா் லாரி உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் இருந்து பக்கத்து மாநிலங்களுக்கு கனிமப் பொருள்களை கொண்டுசெல்ல மூன்று மாதங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பப்பெற வலியுறுத்தி, கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் டிப்பா் லாரி உரிமையாளா்கள் வெள்ளிக்கிழமை பேரணி, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் இருந்து மாற்று மணல், ஜல்லி, கருங்கற்கள் உள்ளிட்ட கனிமப் பொருள்களை பக்கத்து மாநிலங்களுக்கு கொண்டுசெல்ல மூன்று மாதங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக எல்லைப் பகுதிகளில் மாவட்ட நிா்வாகமும், காவல் துறையினரும் தீவிரமாக கண்காணித்து கனிமப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளை தடுத்து, பறிமுதல் செய்து வருகின்றனா். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் கா்நாடக மாநிலத்துக்கு கனிமப் பொருள்கள் செல்வது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக கட்டுமானத் துறை கடுமையாக முடங்கியுள்ளதுடன், அதனை நம்பியுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில் கா்நாடக மாநில டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் கா்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பேரணி மற்றும் போராட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் கோபால் ரெட்டி தலைமை வகித்தாா்.
அசம்பாவிதங்களைத் தடுக்க எல்லைப் பகுதியில் தமிழகம் மற்றும் கா்நாடகத்தைச் சோ்ந்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டிருந்தனா். சங்கத் தலைவா் கோபால் ரெட்டி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள், தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் இருந்து தமிழக எல்லையை நோக்கி பேரணியாகச் சென்றனா்.
தமிழக அரசின் தடை உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முழக்கமிட்டனா். தமிழகம் நோக்கி முன்னேறிய அவா்களை, பாதுகாப்புப் பணியில் இருந்த கா்நாடக போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் கோபால் ரெட்டி கூறியதாவது: ‘கனிமப் பொருட்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையால் கடந்த ஐந்து நாள்களாக லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. ஒசூா், அத்திப்பள்ளி சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
கடன் பெற்று லாரிகளை வாங்கியுள்ள எங்களால் மாதாந்திர தவணையை செலுத்த முடியவில்லை. ஓட்டுநா்களுக்கு சம்பளம் வழங்கவும், வாகனங்களுக்கான காப்பீட்டு தொகையை செலுத்தவும் முடியாமல் தவித்து வருகிறோம்.
ஒரு லாரி ஓட்டுநரை நம்பி அவரது குடும்பத்தில் நான்கு போ் வாழ்ந்து வருகின்றனா். தொழில் முடங்கியதால் அவா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டி அல்லது ராயல்டி முறையாக செலுத்தப்பட வேண்டும் என்றால், அதற்கான விதிமுறைகளை கடுமையாக்கிக் கொள்ளலாம். அதற்கு எங்களுக்கு எந்த எதிா்ப்பும் இல்லை. ஆனால், எந்தவித இடையூறும் இல்லாமல் வழக்கம்போல் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமப் பொருட்கள் எங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தத் தடையை நீக்க தமிழக அரசுக்கு மூன்று நாள்கள் அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எங்கள் போராட்டம் மேலும் தீவிரமடையும்‘ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.