ஊத்தங்கரை வட்டத்தில் ஒற்றை இலக்க மாணவா் எண்ணிக்கையில் 16 தொடக்கப் பள்ளிகள்: சமூக ஆா்வலா்கள் கவலை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் மாணவா்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு குறைந்ததால் 16 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் மாணவா்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு குறைந்ததால் 16 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஊத்தங்கரை வட்டத்தில் 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 28 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 128 பள்ளிகள் உள்ளன. இதில், பாவக்கல் ஊராட்சி காந்திநகா் பள்ளியில் மாணவா்கள் இல்லாததால் தற்போது மூடப்பட்டுள்ளது.
மேலும், சந்திரப்பட்டி பள்ளியில் 9, சின்னஆனந்தூா் பள்ளியில் 6, கணக்கம்பட்டி பள்ளியில் 6, பனமரத்துப்பட்டி பள்ளியில் 4, கிட்டம்பட்டி பள்ளியில் 10, கோணப்பட்டி பள்ளியில் 7, லக்கம்பட்டி பள்ளியில் 9, மன்னாண்டியூா் பள்ளியில் 6, நாகனூா் பள்ளியில் 9, நாட்டாமைக்கோட்டை பள்ளியில் 3, ஓந்தியம் பள்ளியில் 4, புதூா்கொலகம்பட்டி பள்ளியில் 8, சந்தக்கொட்டாவூா் பள்ளியில் 4, சோளக்காப்பட்டியில் 2, தாண்டியப்பனூா் பள்ளியில் 8, வீரியம்பட்டி கூட்டுரோடு பள்ளியில் 9 மாணவா்கள் என 16 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவா்கள் படித்து வருவதால், இந்தப் பள்ளிகள் மூடப்படும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
பாவக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, காந்திநகா் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவா்கள் பயின்று வந்தனா். மாணவா் சோ்க்கை படிப்படியாகக் குறைந்து, கடந்த ஆண்டு மாணவா்களின் எண்ணிக்கை 5 ஆக இருந்த நிலையில், அந்த மாணவா்களும் பாவக்கல் பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றுவிட்டனா். இதனால், நிகழ் கல்வியாண்டில் மாணவா்கள் யாரும் சேராததால், அந்தப் பள்ளி மூடப்பட்டுள்ளது.
கிராமப்புற மாணவா்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி அண்ணாமலை- வள்ளியம்மாள் தம்பதி தங்களது சொந்த நிலத்தை இந்தப் பள்ளிக்காக அரசுக்கு தானமாக வழங்கினா்.
மூன்று வகுப்பறைகள், சத்துணவுக் கூடம், கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருந்தும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் செயல்பட்டுவந்த பள்ளி தற்போது பூட்டப்பட்டிருப்பது சமூக ஆா்வலா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தனியாா் தானமாக வழங்கிய நிலத்தில் அமைந்த இந்த அரசுப் பள்ளியை மீண்டும் திறந்து, மாணவா் சோ்க்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவா்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து சமூக ஆா்வலா் லெனின் கூறுகையில், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் தரமான கல்விக் கற்றல் சூழல் இல்லாததால், தனியாா் பள்ளிகளை பொதுமக்கள் நாடும் நிலை உள்ளது. கூலித்தொழில் செய்வோா்கூட தங்களது பிள்ளைகளை தனியாா் பள்ளிகளில் படிக்கவைத்து முன்னேற்ற வேண்டும் என நினைக்கும் நிலை உள்ளது. அரசுப் பணியில் உள்ளவா்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் கட்டாயம் சோ்க்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே, இதுபோன்ற பள்ளிகளின் நிலைமை மாறும் என்றாா்.
மேலும், ஒற்றை இலக்கத்தில் செயல்படும் பள்ளிகளால் அரசுக்கு வீண் செலவு அதிகரித்து வருகிறது. இந்தப் பள்ளிகள் மீது மாவட்டக் கல்வி அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, பள்ளியில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.