FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாவட்டத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை: பொதுமக்கள் மும்முரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் உள்ளிட்ட இடங்களில்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் உள்ளிட்ட இடங்களில் சிலை பிரதிஷ்டை செய்யும் பணியில் இந்து முன்னணியினர் மற்றும் பக்தர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
நாமக்கல், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேந்தமங்கலம், மோகனூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் நூறு விநாயகர் சிலைகள் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இந்து முன்னணி சார்பில் நாமக்கல் நகரில் 15 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். 
மேலும் நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூர் பகுதிகளில் இருந்து பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. 
இந்த சிலைகள் அனைத்தும் வரும் 16 -ஆம் தேதி மோகனூர் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளன.
முன்னதாக இந்தச் சிலைகள் 16ஆம் தேதி காலை நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயில் முன்பு இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக மோகனூர் காவிரி ஆற்றுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
குமாரபாளையத்தில்...
இந்த வட்டாரத்தில் 60-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குள் 37 சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி தீயணைப்புத் துறை, மின்வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த் துறை அனுமதிக்குப் பின்னர் காவல்துறை மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.
குமாரபாளையம், பள்ளிபாளையம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்படும். வழிபாடுகள் நிறைவடைந்த நிலையில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் சிலைகளை விசர்ஜனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மதுபோதையில் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார்
எச்சரித்துள்ளனர்.
பரமத்திவேலூரில்...
இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி திருவிழா மற்றும் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 150 விநாயகர் சிலைகள் அமைக்கப்படவுள்ளதாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு பகுதிகளில் அமைக்கப்படும் சிலைகள் வரும் 15-ஆம் தேதி இரையமங்கலம் காவிரி ஆற்றிலும், பள்ளிபாளையத்தில் அமைக்கப்படும் விநாயகர் சிலைகள் 16-ஆம் தேதி பள்ளிபாளையம் காவிரி ஆற்றிலும் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
பரமத்தி வேலூர் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளான மல்லசமுத்திரம் மற்றும் வேலகவுண்டம்பட்டிக்குள்பட்ட பகுதிகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் 17-ஆம் தேதி பரமத்திவேலூர் கடைவீதி பகுதியில் நடைபெறும் இந்து எழுச்சி திருவிழா பொதுக்கூட்டம் மற்றும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்துக்குப் பிறகு பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் ஆலய காவிரி கரையில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
கொல்லிமலையில் அமைக்கப்படும் விநாயகர் சிலைகள் வரும் 19-ஆம் தேதி அறப்பளீஸ்வரர் கோயில் அருகே விசர்ஜனம் செய்யப்படுகின்றன. இத்தகவலை நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர் கோபிநாத் தெரிவித்தார்.
தவிர வேலூர்,பரமத்தி,ஜேடர்பாளையம்,நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் 70-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர். 
திருச்செங்கோட்டில்....
திருச்செங்கோடு நகரப்பகுதிகளில் 60 க்கும் மேற்பட்ட இடங்களிலும், ஊரகப்பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட இடங்களிலும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சூரியம்பாளையம்,சட்டையம்புதூர்,தொண்டிகரடு,சிஎச்பி காலனி,பாவடித்தெரு, நாமக்கல் ரோடு, சேலம் ரோடு, நெசவாளர் காலனி,கூட்டப்பள்ளி காலனி போன்ற பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் சிலை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட உள்ளது. அனுமதி பெற்று விநாயகர் சிலை வைப்பவர்கள் அரசு நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments