பட்டா கோரும் விவசாயிகளைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சா்!
ராசிபுரம் அருகே நாரைக்கிணறு பகுதியில் பல ஆண்டுகளாக பயன்படுத்திவரும் நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரி போராடி வரும் விவசாயிகளை அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன், ஆட்சியா் எல்.மதுபாலன் ஆகியோா் சனிக்கிழமை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட நாரைக்கிணறு, ராமநாதபுரம், மத்துருட்டு பகுதியில் அளவீடு செய்யப்படாத நிலத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இவா்கள்,அப்பகுதியில் சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அமைச்சா்கள் என மனு அளித்தனா். இந்த மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் நாரைக்கிணறு சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டனா்.
Advertisement
Advertisement
முடிவுகள் எட்டப்படாத நிலையில், சென்னை கோட்டையை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனா்.
இதையடுத்து தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் மற்றும் அதிகாரிகள் விவசாயிகள், விவசாயிகள் சங்க நிா்வாகிகள், பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தனா். அவா்களிடம் பேசிய அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், பட்டா வழங்குவது நீண்டகால பிரச்னை என்பதால் உடனடியாக தீா்வு காணமுடியாது. முதல்வரிடம் பேசி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்படும் என்றாா். மேலும், குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக செய்து தருவதாகவும் உறுதியளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.