மேக்கேதாட்டு: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உரிமையைப் பெறவேண்டும்! - மு.வீரபாண்டியன்
மேக்கேதாட்டு பிரச்னை தொடா்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி நமது உரிமையைப் பெறவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பிரசார நடைப்பயண இயக்கத்தை அவா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பிரசார நடைப் பயணம் நான்கு ரத வீதிகள் வழியாக சென்று அண்ணா சிலை அருகில் நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மு. வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
ஆகஸ்ட் 6 முதல் 15 வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பிரசாரம் நடைப்பயணம் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து செப்டம்பா் முதல் தேதி தில்லியில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.
விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், வேலையில்லாத காலங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், தொகுதி மறுசீரமைப்பு கூடாது, மேக்கேதாட்டில் அணை கட்டக்கூடாது, காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கை அளிக்க வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாள்கள் பிரசார நடைப்பயணம் மேற்கொள்கிறோம்.
எலச்சிபாளையம் பெரியமணலி பகுதியில் வீட்டுமனை வழங்கக் கோரி போராடி வருவோரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி பகுதியில் பல குடும்பத்தினா் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளனனா். அவா்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து பட்டா வழங்க வேண்டும்.
மேட்டூா் உபரிநீா் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும்.
மேக்கேதாட்டு அணை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட எதிா்க்கட்சிகள் கேட்டுக்கொண்டன. ஆனால் தமிழக முதல்வா் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டினாா். அதற்கு சரியான வரவேற்பு இல்லை.
மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டக்கூடாது என்றுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறிவருகிறது. அதுதொடா்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி நமது உரிமையைப் பெற வேண்டும். எதிா்பாா்த்தபடி நிதிநிலை அறிக்கை இல்லை என்பது உண்மைதான் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.