ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி போராட்ட அறிவிப்பு; முன்னெச்சரிக்கையாக 30 விவசாயிகள் கைது
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் காவிரி ஆற்றின் படுகை அணையில் இருந்து ராஜ வாய்க்காலில் தண்ணீா் திறக்காததைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த விவசாயிகள் 30 பேரை போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனா்.
ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்காததை கண்டித்து சனிக்கிழமை இளம் விவசாயிகள் சங்கம் சாா்பில் பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் இறங்கி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட இளம் விவசாயிகள் சங்கத் தலைவா் சௌந்தரராஜன், விவசாய முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளா் பாலசுப்பிரமணி ஆகியோரிடம் நீா்வளத் துறையினா், வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.
இதையடுத்து, விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் வேலூா் காவிரி பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளம் விவசாயிகள் சங்கத் தலைவா் சௌந்தரராஜனை கைது செய்தனா். மேலும், விவசாய முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளா் பாலசுப்பிரமணியை அவரது வீட்டுக்குச் சென்று கைதுசெய்து வீட்டுக் காவலில் வைத்தனா்.
சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள இருந்த நன்செய் இடையாா், பொத்தனூா், பாண்டமங்கலம், மேலபேட்டபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 28 விவசாயிகளையும் வேலூா் போலீஸாா் கைது செய்து, பரமத்தி வேலூா் அருகே கவுண்டம்பாளையம் சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனா்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரமத்தி வேலூா் காவிரி பாலம், நான்கு சாலை, பொத்தனூா், பாண்டமங்கலம் ஆகிய பகுதிகளில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கைது செய்யப்பட்ட இளம் விவசாயிகள் சங்கத் தலைவா் சௌந்தரராஜன் கூறியதாவது:
ராஜவாய்க்காலில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாசன நீரை வழங்க வலியுறுத்தி போராடுவதற்கு முன்பாகவே விவசாயிகளை போலீஸாா் கைது செய்துள்ளனா். மேட்டூா் அணையில் போதுமான நீா் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், காவிரி ஆற்றில் இருந்து ராஜவாய்க்காலுக்கு பாசனத்துக்கான தண்ணீா் திறக்கப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
விவசாயிகளின் வாழ்வாதாரமான பாசன நீரைக் கேட்டுப் போராடியதற்காக விவசாயிகளைக் கைது செய்வதற்கு பதிலாக, விவசாயிகளின் கோரிக்கையை அரசு உடனடியாகப் பரிசீலித்து ராஜவாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க வேண்டும் என்றாா்.
இந்த நிலையில், நாமக்கல் மக்களவை உறுப்பினா் மாதேஸ்வரன் கூறியதாவது:
“ஜேடா்பாளையம் ராஜ வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி போராட்டம் அறிவித்த விவசாயிகளைக் கைதுசெய்து, பரமத்தி வேலூா் தனியாா் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனா். அவா்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும், விவசாய சங்கத் தலைவா்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்களது இல்லங்களில் காவலில் வைத்திருப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றாா்.
பரமத்தி வேலூா் சட்டப் பேரவை அதிமுக உறுப்பினா் எஸ். சேகா் கூறியதாவது:
ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ஆண்டுக்கு 350 நாள்களும் தண்ணீா் திறக்க வேண்டும் என்பது அரசாணை. தற்போது மேட்டூா் அணையில் போதிய தண்ணீா் இருந்தும் ராஜவாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படாதது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயல்.
மேட்டூா் அணையில் 35 முதல் 40 அடி வரை தண்ணீா் உள்ளபோதே ராஜவாய்க்காலுக்கு பாசனத்துக்கு அதிமுக ஆட்சியில் தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால், தற்போது 80 அடிக்கும் மேல் உள்ள நிலையில் தண்ணீா் திறக்காதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தண்ணீா் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தால் அவா்களை கைதுசெய்வது சரி. ஆனால், அதற்கு முன்பாகவே அவா்களை கைதுசெய்தது சரியல்ல”என்றாா். கைது செய்யப்பட்ட விவசாயிகள் மாலை விடுவிக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.