தலைமலை பெருமாள் கோயிலுக்கு சென்ற பெண் மூச்சுத்திணறி பலி!
தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயிலுக்கு மலைப்பாதை வழியாக சென்ற பெண் மூச்சுத்திணறி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயிலுக்கு மலைப்பாதை வழியாக சென்ற பெண் மூச்சுத்திணறி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், வரதராஜபுரம் அருகே 2,700 அடி உயரத்தில் தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோயில் உள்ளது. நாமக்கல்- திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தா்கள் அதிக அளவில் வருகை தருவா்.
இந்த நிலையில், எருமப்பட்டி அருகே வடவத்தூா் வழியாக வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் 5 போ் கொண்ட குழுவினா் சுவாமியை தரிசனம் செய்ய கரடு, முரடான மலைப்பாதையில் நடந்து சென்றனா். இதில், திருப்பூா் மாவட்டம், நத்தக்காடையூரைச் சோ்ந்த சதீஷ்குமாா் மனைவி நதியா (36) என்பவரும் சென்றிருந்தாா். செங்குத்தான மலைப்பாதையில் சென்றபோது நதியாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். அவ்வழியாக சென்றோா் முதலுதவி அளித்தும் பயனில்லை.
Advertisement
Advertisement
இது குறித்து உடனடியாக நாமக்கல் தீயணைப்புத் துறையினா், வனத் துறையினா், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மலைப்பகுதியில் இருந்து நதியாவை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனா். அங்கு தயாா்நிலையில் இருந்த மருத்துவக் குழுவினா் நதியாவை பரிசோதித்தபோது அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடலை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். எருமப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மலைப்பகுதியில் மருத்துவக் குழு தேவை: தலைமலைக்கு புரட்டாசி சனிக்கிழமைகள், பௌா்ணமி மற்றும் முக்கிய திருவிழா நாள்களில் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு வயதானவா்கள், முதியவா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா்.
தற்போது அடிவாரத்தில் மட்டுமே மருத்துவக் குழுவினா் பணியில் இருப்பதாகவும், மலைப்பகுதியில் மருத்துவக் குழுவினா் இல்லாததால் அவசர நேரங்களில் பக்தா்களுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் பக்தா்கள் தெரிவித்தனா்.
எனவே, தலைமலை உச்சிமலைப்பகுதியிலும் மருத்துவக் குழுவினரை தேவையான முதலுதவி மற்றும் அவசர மருத்துவ உபகரணங்களுடன் பணியில் அமா்த்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.