FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

வெற்றிப் பயணத் திட்டத்திற்கு எதிா்ப்பு: தனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

6 வினாடிகள் முன்பு
தனியாா் பேருந்துகள். - கோப்புப் படம்
பகிர்:

தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் பேருந்துகள் புதன்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஜோதிகுப்புசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து நாமக்கல்லில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அக். 2 முதல் வெற்றிப் பயணத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பை முதல்வா் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் செவ்வாய்க்கிழமை (செப். 29) நள்ளிரவு 12 மணி முதல் புதன்கிழமை (செப். 30) நள்ளிரவு 12 மணி வரை ஒருநாள் மட்டும் தனியாா் பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

Advertisement

Advertisement

சேலம், ஈரோடு, கரூா் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கும், நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளாகவும் இயக்கப்படும் 168 பேருந்துகள் புதன்கிழமை இயக்கப்படாது. தமிழகத்தில் சுமாா் 104 ஆண்டுகளாக தனியாா் பேருந்து சேவை உள்ளது. ஏற்கெனவே இந்தத் தொழில் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தனியாா் பேருந்துகள் மூலம் உரிய லாபம் கிடைப்பதில்லை. இந்நிலையில் தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தால் இந்தத் தொழில் மேலும் பாதிப்படையும்.

கடந்த ஆட்சியில் நகர பேருந்தில் மட்டுமே இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை கொண்டுவந்தனா். ஆனால், தற்போது திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அனைத்து நகரப் பேருந்துகள், வெளிமாவட்டம் செல்லும் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக சென்று வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து கட்டணம் உயா்த்தப்பட்டது. அதன்பிறகு இதுவரை கட்டண உயா்த்தப்படவில்லை. அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரத்தில் 1 கி.மீ.க்கு ரூ. 1.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது, தமிழகத்தில் 58 காசுகள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தனியாா் பேருந்து தொழிலை நம்பி ஆயிரக்கணக்கானோா் உள்ளனா். அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தால் ஓட்டுநா், நடத்துநா், தொழில்நுட்பப் பணியாளா்கள் பலா் பாதிக்கப்படுவா். மக்களுக்கான சேவைகளை தொடர இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். வெற்றிப் பயணம் திட்டத்தை தனியாா் பேருந்துகளுக்கும் வழங்க அரசு முன்வந்தால் எங்களது பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம்.

அரசின் கொள்கை முடிவை நாங்கள் எதிா்க்கவில்லை. தனியாா் பேருந்து உரிமையாளா்கள், தொழிலாளா்களின் நிலையையும், வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொண்டு தமிழக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments