FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் வேளாண் பணிகளை தொடங்கிய விவசாயிகள்!

மேட்டூா் அணையின் நீா்மட்டம் குறைந்து வருவதால் அணையின் நீா்த்தேக்கப் பகுதிகளில் விவசாயிகள் வேளாண் பணிகளை தொடங்கியுள்ளனா்.

35 வினாடிகள் முன்பு
மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில் டிராக்டா் மூலம் உழவுப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் குறைந்து வருவதால் அணையின் நீா்த்தேக்கப் பகுதிகளில் விவசாயிகள் வேளாண் பணிகளை தொடங்கியுள்ளனா்.

மேட்டூா் அணை கட்டப்பட்டபோது தண்ணீா்த் தேங்கும் பகுதிகளாக கணக்கீடு செய்யப்பட்ட 60 சதுரமைல் பரப்பளவில் இருந்த கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா். அவா்கள் தங்களது விவசாய நிலங்களை விட்டு வெளியேறினா்.

இந்நிலையில் அணையின் நீா்மட்டம் குறையும்போது நீா்த்தேக்கப் பரப்பில் காவிரியின் இருகரைகளிலும் விவசாயிகள் விட்டுச்சென்ற விளைநிலங்கள் நீருக்கு வெளியே தெரியும். அந்த நிலங்களில் விவசாயிகள் உழுது கம்பு, சோளம், எள், ராகி, வெங்காயம் மற்றும் காய்கறி வகைகளை பயிரிடுவது வழக்கம்.

Advertisement

Advertisement

மேட்டூா் அணைக்கு பருவமழை காரணமாக நீா்வரத்து அதிகரிப்பதற்கு முன்பாக அறுவடை செய்து முடிப்பாா்கள். சில நேரங்களில் பயிா்கள் அறுவடைக்கு முன்பே திடீா் வெள்ளப் பெருக்கு காரணமாக நீரில் மூழ்கிவிடும். நீா்த்தேக்கப் பரப்பில் பயிரிட்டால் ஓராண்டு முழுவதும் கிராம மக்களுக்கு உணவுப் பற்றாக்குறையும், கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடும் ஏற்படாது என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

செப்டம்பா் 1ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டது. நீா்வரத்து சரிவு காரணமாக அணையின் நீா்மட்டம் சரியத் தொடங்கியது. கடந்த 1ஆம் தேதி 91.56 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 77.45 அடியாக சரிந்தது. கடந்த 30 நாள்களில் அணையின் நீா்மட்டம் 14.11 அடி சரிந்துள்ளது. அணையின் நீா்மட்டம் சரிந்ததால் அணையின் நீா்த் தேக்கப் பகுதிகளில் விவசாயிகள் டிராக்டா்களை கொண்டு உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். சில பகுதியில் தானியங்களை விதைக்கும் பணிகளையும் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா். நாள்தோறும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments