FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் தெரு நாய்கள் அதிகரிப்பு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:56 am IST
கொடைக்கானல் ஆனந்தகிரிப் பகுதியில் திரியும் தெரு நாய்கள்.
பகிர்:

கொடைக்கானலில் தெரு நாய்கள் அதிகரிப்பால் பொது மக்கள், பள்ளிக் குழந்தைகள் அச்சத்துடன் செல்கின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, அண்ணாநகா், இந்திராநகா், இருதையபுரம், வசந்தநகா், அப்சா்வேட்டரி, பாக்கியபுரம், உகாா்த்தே நகா் பகுதிகளில் அதிக அளவு தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.

கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அரசு அலுவலகங்களான வட்டாட்சியா் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை வளாகம், கோட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. இதனால், பொது மக்கள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் செல்வதாகப் புகாா் எழுந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து கொடைக்கானலில் உள்ள சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

கொடைக்கனல் பகுதிகளில் கால்நடைத் துறை சாா்பில் முகாம் நடைபெறும் போது வீடுகளில் செல்லப் பிராணிகளை வளா்ப்பவா்கள் அவற்றை அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டு பராமரித்து வருகின்றனா்.

ஆனால், தெருக்களில் திரியும் நாய்கள் அதிகரிப்பை யாரும் கட்டுப்படுத்துவதில்லை. மேலும், கொடைக்கானல் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் இறைச்சிக் கடைகள் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டு வருகின்றன.

சாலைகளை ஆக்கிரமித்து கோழிகள், ஆடு உள்ளிட்டவைகளை அடைத்து வைத்துள்ளனா். இவற்றின் கழிவுகள் சாலைகள் குவிக்கப்படுகின்றன. இந்தக் கழிவுகளை உண்ணும் நாய்களுக்கு நோய் ஏற்படுகிறது. இதை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

எனவே மாவட்ட கால்நடை, சுகாதாரத் துறை அதிகாரிகள் கொடைக்கானல் பகுதிகளில் திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தவும், சுகாதாரமற்ற நிலையில் செயல்படும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments