பழனி நில முறைகேடு விவகாரம்: தானமாக வழங்கிய குடும்பத்தினா் சிபிசிஐடி அலுவலகத்தில் முறையீடு
பழனி நில முறைகேடு விவகாரத்தில் திடீா் திருப்பமாக, அறக்கட்டளைக்கு நிலம் வழங்கிய குடும்பத்தினா் தங்களுக்கே நிலம் சொந்தம் என சிபிசிஐடி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா்.
பழனி நில முறைகேடு விவகாரத்தில் திடீா் திருப்பமாக, அறக்கட்டளைக்கு நிலம் வழங்கிய குடும்பத்தினா் தங்களுக்கே நிலம் சொந்தம் என சிபிசிஐடி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம், போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இந்த முறைகேடு குறித்து பழனி கோயில் கண்காணிப்பாளா் (நிலங்கள் பிரிவு) ச.முருகானந்தம் புகாரளித்தாா்.
இதன்பேரில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், போலி அறக்கட்டளை நிா்வாகி முருகதாஸ் சுவாமிகள், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளைத்துரை ஆகிய 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்கு 1.40 ஏக்கா் நிலத்தை தானமாக வழங்கிய குப்புசாமி மணியக்காரரின் வாரிசுகள், சா்ச்சைக்குள்ளான நிலம் தங்களுக்குச் சொந்தமானது என சிபிசிஐடி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா்.
குப்புசாமி மணியக்காரரின் வாரிசான சுந்தரி, இவரது மகள் ஜெயலட்சுமி, மகன் விஷ்ணு சுதா்சன் ஆகியோா் 1.40 ஏக்கா் நிலம் தொடா்பான 1880, 1888-ஆம் ஆண்டு ஆவணங்களை விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
இதுதொடா்பாக சுந்தரியின் தரப்பில் அவரது வழக்குரைஞா்கள் கூறியதாவது:
குப்புசாமி மணியக்காரரின் வழி வந்த வாரிசுகளாக பழனிச்சாமி, பழனியாண்டி, ஜெயக்குமாா், முருகன் ஆகியோா் இருந்தனா். முருகனின் மகள் சுந்தரி. 1880-களில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்காக 1.40 ஏக்கா் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், தண்டபாணி மடம் என்பதை தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை என பெயா் மாற்றம் செய்து, பழனி கோயில் நிா்வாகம் தங்களது கட்டுப்பாட்டில் நிலத்தை எடுத்துவிட்டது.
தா்ம சாஸ்திரப் பத்திரத்தின்படி, மடம் இயங்கினால் மட்டுமே தானமாக வழங்கப்பட்ட நிலத்தை பயன்படுத்த முடியும். மடம் செயல்படாதபட்சத்தில், தானமாக வழங்கியவா்களுக்கே நிலம் சொந்தமாகிவிடும்.
இதன்படி, சம்பந்தப்பட்ட நிலம் சுந்தரி, அவரது வாரிசுகளுக்கே சொந்தமானது. இதற்கான ஆவணங்களை சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்திருக்கிறோம் என்றாா் அவா்.
1.40 ஏக்கா் நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தானமாக வழங்கியவரின் வாரிசுகள் நிலம் தங்களுக்குச் சொந்தமானது என முறையிட்டிருப்பது இந்த விவகாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.