FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பிற மாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டு செல்ல தடை விதிப்பு விவகாரம்: அரசு பதிலளிக்க உத்தரவு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 1:31 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களைக் கொண்டு செல்ல தமிழக அரசின் கனிம வளத் துறை விதித்த தடையை நீக்கக் கோரிய மனு தொடா்பாக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த லிபின் பொன்னுசுவாமி லீலா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

நாங்கள் வாடகை முறையில் லாரிகள் மூலம் கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அரசின் உரிய அனுமதியுடன் தமிழகத்திலிருந்து கனிமங்களைக் கொண்டு சென்று வருகிறோம். இதன்மூலம், பலா் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களைக் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால், பலா் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல கனிம வள இயக்குநா் விதித்த தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

கனிம வள இயக்குநரின் இந்த உத்தரவு அரசமைப்புக்கு எதிரானது. ஏற்கெனவே குஜராத்தில் பிறப்பிக்கப்பட்ட இதுபோன்ற உத்தரவை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது. முறையாக, அரசிடம் அனுமதி பெற்ற குவாரியிலிருந்து எடுக்கப்பட்ட மணலைக் கொண்டு செல்ல இந்தத் தடை விதிக்கப்பட்டது என்றாா்.

இதற்கு அரசுத் தரப்பில், கனிமவள விற்பனையை முறைப்படுத்தும் நோக்கிலேயே இந்த உத்தரவு தற்காலிகமாக 3 மாதங்களுக்கு பிறப்பிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, ‘கனிம வள விற்பனையை முறைப்படுத்தும் நோக்கத்துக்காக உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. மனுதாரா் உள்ளிட்ட லாரி ஓட்டுநா்கள் கனிமங்களை ஓா் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்பவா்கள். கல் குவாரிகள் விதிகளுக்குள்பட்டுத்தான் செயல்படுகிறது என்பது அவா்களுக்கு எப்படித் தெரியும்’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments